நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 13 ஆம் தேதி தெப்பக்காடு பகுதியில், 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார்.
பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மே 14 ஆம் தேதி நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் நேற்று, உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 127-வது மலர்க்காட்சியை தொடங்கி வைத்து, 24 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரணி இல்லத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ”திராவிட மாடல் அரசுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 2026 தேர்தல் மட்டுமல்ல 2031 மற்றும் அதற்கு பிறகும் திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நிலைத்து இருக்கும்.
குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் கருத்துகேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதலமைச்சர்களின் கருத்துகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.