தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28 ஆம் தேதியில் இருந்து ஏப்.15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 8,71,239 மாணவர்களில் 8,17,261 (93.80%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.88% தேர்ச்சி. மாணவிகள் 91.74% தேர்ச்சி. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.14 % கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் கடந்த ஆண்டுபொதுத் தேர்வை விட 2.25% இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 4917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 1,867 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும் அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 10,256 மாணவர்களும், கணிதம் பாடத்தில் 1,996 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவில் 98.31% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் (97.45%) இரண்டாம் இடமும், தூத்துக்குடி மாவட்டம் (96.76%) மூன்றாம் இடம் பிடித்துள்ளன.
அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 12,290 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 11,409 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.