தமிழ்நாடு

வணிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள் இதோ!

அமைதிமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வணிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5.5.2025 அன்று மதுராந்தகத்தில், 42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில், ஆற்றிய உரை:-

மதுராந்தகத்திற்குள் தமிழ்நாடே கூடியிருக்கிறதா? என்று வியப்படைகின்ற வகையில், இந்த மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு, சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கின்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் நம்முடைய அருமை சகோதரர் விக்கிரமராஜா அவர்களை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

நம்முடைய விக்கிரமராஜா அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், இதுபோன்ற மாநாடுகளை மட்டுமல்ல, வணிகர்களுக்கான நலன்களையும் பிரமாண்டமாக செய்யக்கூடியவர் நம்முடைய விக்கிரமராஜா அவர்கள். அவர் சொன்னார் – நான் அவரிடத்தில் பாசத்தோடு, அன்போடு, உரிமையோடு இருப்பதுபோல் அவரும் அதே உணர்வோடு பழகுகிறார். இது உங்கள் மீது நான் வைத்திருக்கக்கூடிய அன்பின் அடையாளம் என்று எடுத்துச் சொன்னார். உண்மைதான். அது ஒரு பக்கம் இருந்தாலும், உங்கள் மேல் அவர் வைத்திருக்கின்ற அக்கறையால்தான், அவர் மேல் நீங்கள் இந்தளவுக்கு அன்பையும், பாசத்தையும் பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுவும் உண்மை.

உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று சொன்னால், முதல் ஆளாக ஓடோடி வந்து நிற்பார்; உடனே, அந்தப் பிரச்சினையை என் கவனத்திற்குக் கொண்டு வந்துவிடுவார். அவருடைய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அது எப்படிப்பட்ட கோரிக்கையாக இருந்தாலும் சரி. அதை சாதாரணமாக தான் சொல்வார். அதையும் அழுத்தம் கொடுத்து பிடிவாதமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு சொல்லக்கூடிய அந்த ஆற்றலைப் பெற்றவர்.

எந்த கோரிக்கையாக இருந்தாலும், சிரித்த முகத்தோடு முதலமைச்சரிடம் சொன்னால், எப்படி கன்வின்ஸ் செய்யலாம்; அதிகாரிகளிடத்தில் எப்படி பேசினால் அவர்களை சரி செய்யலாம் என்று அந்த டெக்னிக்கை நன்றாக தெரிந்து வைத்திருக்கக்கூடியவர்தான் நம்முடைய விக்கிரமராஜா அவர்கள். அதேபோல், அவருக்குத் துணையாக நிற்கக்கூடிய தோளோடு தோள் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த மாநாட்டில் கூடியிருக்கின்ற உங்களுக்கும், ஏன் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் முதலில் என்னுடைய வணிகர் நாள் வாழ்த்துகளை நான் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டுதோறும் மே ஐந்தாம் நாளை வணிகர் நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுவருகிறேன். பெரும்பாலும் நானும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறேன். இந்த அழைப்பிதழை வழங்கிய நேரத்தில் கூட நம்முடைய தலைவர் அவர்களும், நம்முடைய நிர்வாகிகளும் என்னிடத்தில் பல கோரிக்கைகளை வைத்தார்கள். இங்கேயும் வைத்தார்கள். இங்கே மேடையில் மட்டுமல்ல, கோட்டையில் மட்டுமல்ல – எப்போதும் பார்க்கின்றபோதெல்லாம் வைப்பார்கள். அதிலும் குறிப்பாக, என்னை கோட்டையில் வந்து சந்தித்து இந்த அழைப்பை வழங்கியபோது, மே 5-ஐ வணிகர் நாளாக அரசு அறிவிக்க வேண்டும் – இது இப்போது மட்டுமல்ல, தொடர்ந்து நீங்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த கோரிக்கைக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால், இதுதான் பெரிய கோரிக்கையாக இருந்தது. மற்ற கோரிக்கைகள் எல்லாம் பெரிய கோரிக்கையாக இல்லையா? என்று கேட்டுவிடாதீர்கள். அதுவும் கோரிக்கைகள் தான். ஆனால், இன்று மே 5-ஆம் தேதியாக இருக்கின்ற காரணத்தினால், அந்த நாளில் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாநாடுபோல் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால் முதல் அறிவிப்பாக இந்த அறிவிப்பை நான் வெளியிட்டிருக்கிறேன்.

வணிகர்களாக இருக்கக்கூடிய நீங்கள்தான், மக்களோடு மக்களாக, மக்களின் உள்ளத்தையும், உணர்வுகளையும் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு உறுதுணையாக நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் இருக்கும்; அதில் எந்தவித சந்தேகமும் நீங்கள் அடையவேண்டிய அவசியமில்லை. அது கலைஞர் காலமாக இருந்தாலும் சரி, என்னுடைய காலமாக இருந்தாலும் சரி, அல்லது எனக்கு பிறகு வரக்கூடிய திராவிட இயக்கத்தை காப்பாற்றக்கூடிய யாராக இருந்தாலும், நிச்சயமாக திராவிட இயக்கம் ஒன்று இருக்கின்ற வரையில், வணிகர்களின் நலனைக் காக்கின்ற அரசாக, இயக்கமாக தான் இருக்கும்.

அதேபோல், நீங்களும் தொடர்ந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், வணிகர்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய இந்தப் பாச உணர்வுக்கு அடித்தளமிட்ட சாதனைகளைப் பட்டியலிட்டு சொல்லவேண்டும் என்று சொன்னால்,

இந்தியாவிலேயே முதன்முதலாக, 1989-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில்தான் வணிகப் பெருமக்களுடைய நலனுக்காக “தமிழ்நாடு வணிகர் நல வாரியம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது 35 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் அந்த அமைப்பை உருவாக்கியவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தான் என்பதை யாரும் மறந்திட முடியாது!

அப்படிப்பட்ட வணிகர் நல வாரியத்தை சீரமைத்து, உறுப்பினர் சேர்க்கையை செம்மைப்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக நாம் சொன்னோம்; சொன்னதை செய்திருக்கிறோம்!

நம்முடைய திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் இந்த வாரியத்தில் இன்று வரை சேர்ந்திருக்கின்ற மொத்த உறுப்பினர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 88 ஆயிரத்து 496.

இந்த மாநாட்டிலும், உங்களுடைய கோரிக்கைகளை சிலவற்றை தீர்மானங்களாக இங்கே நிறைவேற்றியிருக்கிறார்கள். நம்முடைய விக்கிரமராஜா அவர்களும் என்னிடத்தில் சில கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறார். அந்த அடிப்படையில், சில அறிவிப்புகளை இந்த மாநாட்டின் வாயிலாக நான் வெளியிட விரும்புகிறேன். முதல் அறிவிப்பு வணிகர் நாள் அன்று நான் சொன்னதை முதல் அறிப்பாக கருதவேண்டாம். அது சிறப்பு அறிவிப்பு. ஆனால், மற்ற அறிவிப்புடன் அதை சேர்த்துக் கொள்ளவில்லை.

முதல் அறிவிப்பு

வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து, நிரந்தர உறுப்பினராக இருக்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப உதவித்தொகையை, ஒரு இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக உயர்த்தி இருந்தோம். வருங்காலத்தில், இது ஐந்து இலட்சமாக ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல், கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை – கால நிர்ணயம் வழங்கியிருக்கிறீர்கள் – அதை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பு

உணவுப் பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்தல் தொழில்கள் தவிர்த்து, 500 சதுர அடிக்குக் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு, சுயசான்றிதழ் முறையில் இனி தொழில் உரிமம் வழங்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு

சென்னை மாநகராட்சி நீங்கலாக, மற்ற மாநகராட்சிகளில் இருக்கின்ற கடைகள், வணிக வளாகங்களின் பிரச்னைகளைத் தீர்க்க, வழிகாட்டு குழுக்கள் 2024-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதேபோல், சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு

9 சதுர மீட்டருக்கு மிகாமல் வைக்கும் ஒரு பெயர் பலகைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

ஐந்தாவது அறிவிப்பு

தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதில் வர்த்தகங்கள், சிறு வியாபாரிகளுக்காக புதிய இணையம் அறிமுகப்படுத்தப்படும். இதில் வர்த்தக உரிமம், கடைகள், உணவகங்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட 22 சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வர்த்தகர்கள் தங்களுக்குத் தேவையான அனுமதிகளை எளிதாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஆறாவது அறிவிப்பு

பொதுமக்களின் நலன் கருதி அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசு ஆணை ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்.

வணிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள் இதோ!

மாநாட்டில் இங்கே பேசியிருக்கக்கூடிய நிர்வாகிகள் மற்றும் நம்முடைய சகோதரர் விக்கிரமராஜா அவர்கள் மேலும், மேலும் சில தீர்மானங்களை சொல்லியிருக்கிறார்கள். நிச்சயமாக, உறுதியாக எந்த நம்பிக்கையோடு, சொன்னீர்களோ, அந்த நம்பிக்கையோடு இருங்கள். அந்த நம்பிக்கைக்குரியவன் நான். உறுதியாக சொல்கிறேன். எல்லாவற்றையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்படும் என்பதை நான் மிகத் தெளிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

படிப்படியாக என்று தான் சொன்னேன் – தவழ்ந்து சென்று நிறைவேற்றப்படும் என்று சொல்லவில்லை. ஊர்ந்து சென்று நிறைவேற்றப்படும் என்று சொல்லவில்லை. படிப்படியாக... அதையெல்லாம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பதை உறுதியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் என்னை மூன்றாவது மனிதனாக பார்க்காதீர்கள் – உங்களில் ஒருவன் நான். நீங்கள் எப்படி எங்களுக்குத் துணையாக இருக்கிறீர்களோ, அதேபோல் நானும் உங்களுக்கு துணையாக, நிச்சயமாக இருப்பேன் – இது திராவிட மாடல் அரசு – என்றும் துணை நிற்கும்.

இன்றைக்கு அமைதியான மாநிலத்தில்தான் தொழிலும், வணிகமும் வளரும்! தொழிலாளர்களும், வர்த்தகர்களும் நிம்மதியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அமைதிமிக்க மாநிலமாக நம்முடைய தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் அனைத்துத் தரப்பு மக்களுடைய வாழ்க்கையிலும் விடியலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆட்சி அமைந்தவுடன், ஒரு விடியல் ஆட்சி என்று சொன்னோம். நீங்கள் ஒன்று மறந்திருக்க மாட்டீர்கள். தி.மு.க. ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் செய்திகள், நிலவரங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கும்போது ஆட்சிப் பிடிப்பதற்கான மெஜாரிட்டி வந்த பிறகு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக சென்றிருந்தேன். அங்கே சென்று மலர் வளையம் வைத்து, வணக்கம் செலுத்திவிட்டு, வெளியில் வருகின்றபோது, பத்திரிகை நிருபர்கள் என்னை சந்தித்து கேட்டார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கிறீர்கள் – என்ன செய்தி சொல்லமுடியும் என்று கேட்டார்கள். நான் ஒரே வார்த்தை தான் சொன்னேன் – தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் அளித்திருக்கக்கூடிய உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நிச்சயமாக நான் காப்பாற்றுவேன் என்று சொன்னேன். அடுத்து, வாக்களித்தவர்களுக்காக மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி நடைபெறும் என்று சொன்னேன். அதை சொல்லிவிட்டு மற்றொன்றையும் சொன்னேன் – வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும் – வாக்களிக்க மறந்தவர்கள், தவறியவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே... என்று வருந்தவேண்டும்.

அந்த உணர்வோடு என்னுடைய ஆட்சி இருக்கவேண்டும் என்று நான் சொன்னேன். அதைத்தான் நாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அமைதிமிக்க மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்முடைய ஆட்சி அமைந்தவுடன் விடியல் ஆட்சி என்று சொன்னோம். உங்கள் முகங்களில் தெரிகின்ற மகிழ்ச்சிதான் விடியலுக்கான காரணம்!

தமிழ்நாட்டு மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஆண்டுக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

மகளிர் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் துணை நிற்கும் விடியல் பயணம் திட்டம்!

நம்முடைய வீட்டுப் பிள்ளைகளை உலக நிறுவனங்களுக்குத் தலைமையேற்கின்ற அளவிற்கு திறன் வளர்க்கும், தொழில் பயிற்சியில் சிறந்து விளங்கக்கூடிய “நான் முதல்வன்” திட்டம்! அண்மையில்கூட, இந்தத் திட்டத்தால், எத்தனை பேர் குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று செய்திகளில் மற்றும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அரசுப் பள்ளிகளில் படித்த நம்முடைய வீட்டுப் பிள்ளைகள், தடையில்லாமல் உயர்கல்வியை தொடரவேண்டும் என்று “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ்ப்புதல்வன்” திட்டம்! இதனால், உயர்கல்விச் சேர்க்கை விகிதம் இன்றைக்கு அதிகரித்திருக்கிறது.

வளமான எதிர்காலத்திற்கு நலமான குழந்தைகள்தான் ஆதாரம். அதனால் தான் “ஊட்டச்சத்தை உறுதிசெய்” என்ற ஒரு சிறப்பான திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நீதிக்கட்சிகளின் தலைவர்களில் ஒருவராக இருந்த சர் பிட்டி தியாகராயர் அவர்கள் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தாலும், அதை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அந்தத் திட்டத்தை சிறப்பாக செய்யவேண்டும் என்று முடிவெடுத்து, தமிழ்நாடு முழுவதும் அந்தத் திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். அதற்குப்பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அதற்குப் பிறகு உண்மையான சத்துணவை வழங்கவேண்டும் என்று கலைஞர் முதலமைச்சராக வந்த பிறகு முட்டையோடு சத்துணவை வழங்கினார்.

இப்போது திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நாங்கள் “காலை உணவுத் திட்டம்” என்ற ஒரு சிறப்பான திட்டத்தை கொண்டு வந்து சுவையான, சூடான உணவை வழங்கக்கூடிய திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி “எல்லார்க்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் கவனத்துடன் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனால்தான், இன்றைக்கு தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது!

கடந்த நான்கு ஆண்டுகளில், 10 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வெளிநாடுகளிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் பெருகியதால், இன்றைக்கு தமிழ்நாடுதான் தொழில் புரட்சி, தொழில் துறையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உருவெடுத்திருக்கிறது. அதனால், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களும் இன்றைக்கு பெருகி இருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம் கடந்த ஆட்சிக்காலத்தில் எட்டப்படாத சாதனை! இந்தியாவில் எந்த மாநிலமும் எட்டாத சாதனைகள்!

இந்தச் சாதனைகளுக்குத் தொடக்கமான நாள் எந்த நாள் என்று கேட்டீர்கள் என்றால், மே 7, இன்னும் இரண்டு நாளில் வர இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது - என்னை நம்பி வாக்களித்திருக்கக்கூடிய உங்களுக்கு உண்மையாக இருந்து நாங்கள் பணியாற்றி, தொடர்ந்து சேவை செய்ய, சாதனைகளை படைக்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை உங்கள் எல்லோருடைய ஆதரவுடன் வளர்த்தெடுத்திருக்கிறேன் என்று நான் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவேன்! இந்த உழைப்பை நான் தொடர்ந்து கொடுப்பேன்.

இங்கே கூடியிருக்கின்ற உங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் சொல்கிறேன்…

இது என்னுடைய அரசு அல்ல; இது, உங்களுடைய அரசு! உங்களுடைய நலனுக்காக நீங்கள் உருவாக்கிய திராவிட மாடல் அரசு! இந்த அரசுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் வணிகப் பெருமக்களாக இருக்கக்கூடிய நீங்களும், தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில், நீங்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள். அதை எல்லாம் ஓரளவிற்கு இப்போது அறிவித்திருக்கிறேன். பல கோரிக்கைகள் இன்னும் இருக்கிறது. நான் மறக்கமாட்டேன். ஏற்கனவே, இது குறித்து அதிகாரிகளிடத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். விவாதித்துக் கொண்டிருக்கிறோம். நாளை காலை சென்றவுடன், அதிகாரிகளை அழைத்து மறுபடியும் அதை நினைவுபடுத்துவேன். இதே வேளைதான். நான் விட்டாலும், விக்கிரமராஜா விடமாட்டார். அதுவும் எனக்கு தெரியும். என்ன ஆனது? என்ன ஆனது? என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் வரும்போது நேரம் எல்லாம் கொடுக்கவேண்டாம். எப்போது வந்தாலும், கோட்டை கதவு திறந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அதனால் விடமாட்டார் அதுவும் எனக்குத் தெரியும். நிச்சயமாக அந்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றித் தரப்படும்.

இந்த நிலையில், நீங்கள் எல்லாம் இவ்வளவு கோரிக்கை வைத்தீர்கள் – உங்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கட்டுமா? என்ன கோரிக்கை என்றால் வேறு ஒன்றும் இல்லை…

வழக்கமாக நான் பங்கேற்கக்கூடிய திருமண விழாக்களில் மணமக்களை பார்த்து சொல்வேன் – உங்களுக்கு குழந்தை பிறந்தது என்றால், அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்று மணமக்களிடம் வேண்டுகோள் வைப்பேன். ஏனென்றால், தமிழ்நாட்டில் இருக்கிறோம். தமிழர்களாக இருக்கிறோம். வட இந்தியா பெயர் வைக்கிறோம் – ஆங்கிலப் பெயர் வைக்கிறோம். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு தமிழ் பெயர் வையுங்கள் என்று நான் வேண்டுகோள் வைப்பேன். இங்கே அதேபோல், நீங்கள் யாரை குழந்தை என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்கு என்று இருக்கக்கூடிய கடைகளைத்தான் குழந்தைகளாக நினைக்கிறீர்கள். வணிகர்களாக இருக்கக்கூடிய உங்கள் கடைகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருந்தால், அதை உடனடியாக மாற்றி தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று ஒரு கோரிக்கையை நான் வைக்கிறேன்.

தனித்தமிழ்ச் சொற்களால் உங்கள் கடைகளை அடையாளப்படுத்துங்கள். ஆங்கிலத்தில் இருந்தால், தமிழாக்கம் செய்து எழுதலாம். தமிழ் பெயரை வையுங்கள். தலைவர் கலைஞர் தலைமையிலான முந்தைய கழக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது. அதை, தற்போது நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொண்டு எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்ற எண்ணத்திற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும் என்று கேட்டு, அடுத்த ஆண்டு இதே நாளில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தது என்ற வெற்றிச் செய்தியோடு, எங்களுடன் சேர்ந்து நீங்களும் பணியாற்ற வேண்டும் என்ற அந்த அன்பு வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories