தமிழ்நாடு

”ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா பயணத்தில் எந்த குறைபாடும் இல்லை” : தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!

சென்னைக்கு வருகை தந்த ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

”ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா பயணத்தில் எந்த குறைபாடும் இல்லை” : தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க அமைச்சரும், ஒன்றிய சுகாதார துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா பயணம் செய்த குண்டு துளைக்காத வாகனத்திலிருந்து மாற்று வாகனத்தில் பயணம் செய்தது குறித்து தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா அவர்கள் மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய Z+ பாதுகாப்பு பிரிவு உடையவராவார். அவர் 02.05.2025 அன்று சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டது. அதன்படி அவருக்காக குண்டு துளைக்காத வாகனமும் மற்றும் அவருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிப்பதற்காக இரண்டு வாகனங்களும். தமிழ்நாடு பாதுகாப்பு படையினர் பயணிக்க மூன்று வாகனங்களும், ஒரு நோயாளர் ஊர்தி (AMBULANCE) மற்றும் அரசு மரபு வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது.

இத்தகைய குண்டு துளைக்காத வாகனங்கள், ஒன்றிய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட பணிமனைகளில் தயாரிக்கப்பட்டு பாதுகாப்புப்பிரிவின் பயன்பாட்டில் நல்ல முறையில் இயங்கிவருகின்றன. இத்தகைய வாகனங்கள், தொழில்நுட்ப காரணங்களால் அதிவேகமாக செல்லக்கூடாது என நிபந்தனைகள் உள்ளன.

03.05.2025 அன்று காலை SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு மதியம் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் பொற்கோயிலுக்குச் சென்று பின்னர் இரவு எட்டு நாற்பது மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி பயணிப்பதற்காக மாலை ஐந்து முப்பது மணியளவில் வேலூரிலிருந்து புறப்பட்டு ஒன்றிய அமைச்சர் சென்னை திரும்பினார்.

இரவு 7.30 மணியளவில், தாம்பரம் மாநகரம் எல்லைக்குட்பட்ட வண்டலூர் மிஞ்சூர் வெளிவட்டச் சாலையில் திருமுடிவாக்கம் அருகில் வந்து கொண்டிருந்தனர். குண்டுதுளைக்கமுடியாத வாகனங்கள் அதிக எடை கொண்டவை என்பதாலும், தொழில்நுட்ப காரணங்களுக்காகவும் இவற்றை மற்ற வாகனங்களின் வேகத்திற்கு இணையாக இயக்குவதில்லை. ஆனால், ஒன்றிய அமைச்சரின் நேர்முக உதவியாளரின் வற்புறுத்தியதின் பேரில், வாகனங்கள் மணிக்கு 120 கிமீக்கும் அதிகமான வேகத்தில் இயக்கினர்.

அதனால் குண்டு துளைக்காத காரினை மற்ற வாகனங்களுக்கு இணையான வேகத்திற்கு இயக்க முற்பட்டபொழுது, பின்பக்க சக்கரத்தில் உருவான உராய்வு சத்தத்தினை அறிந்து அத்தகவலைக் கூறிவிட்டு, ஒட்டுநர் ஒன்றிய அமைச்சரின் பாதுகாப்பினைக் கருதி வாகனத்தில் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நிறுத்தினார். உடனடியாக ஒன்றிய அமைச்சர் அவர்களை அரசு மரபின்படி வழங்கப்பட்ட மாற்று வாகனத்தில் ஏற்றி, உரிய பாதுகாப்புடன் சென்னை விமானநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதில் அமைச்சர் பயணம் செய்த வாகனத்திற்கு எவ்விதசேதமோ அதன் உள்ளிருந்தவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு குறைபாடோ ஏற்படவில்லை. ஒன்றிய அமைச்சர் பயணம் செய்த குண்டு துளைக்காத வாகனம் உடனடியாக நிறுத்தப்பட்டபொழுது அவரது உடைமைகளை பின்னால் எடுத்து வந்த எட்டாவது நிலையிலிருந்த வாகனத்தின் மீது பத்தாவது நிலையிருந்த பாதுகாப்பு வீரர்களின் வாகனம், பின்புறத்தில் வந்து உரசி நின்றது. இதனால் வாகனத்தின் இடது பின்புறம் மற்றும் 10வது வாகனத்தின் வலது முன் பகுதி மிகக் குறைந்த சேதம் எற்பட்டது.

மிக முக்கிய விருந்தினர்களுடன் பயணிப்பவர்கள், வாகனத்தின் வேகத்திறனுக்கு அதிகமான வேகத்தில் வாகனங்களை இயக்க வற்புறுத்த வேண்டாமென அறிவுறுத்தல் செய்யப்பட்டதுடன், வாகனத்தின் வேகத்திறனுக்கும் கூடுதலான வேகத்தில் இயக்ககூடாதென காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் பாதுகாப்பு பிரிவில் உள்ள குண்டு துளைக்காத வாகனங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதால் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு முக்கிய விருந்தினர்கள் வரும்பொழுது அவர்களின் வேண்டுகோளின்படி. இவ்வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories