ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இதனால் ஆளுநர்கள் மாநில அரசுகளின் முடிவுகளில் திட்டமிட்டே தலையிட்டு, திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் இழுத்தடித்து வருகிறார்கள். மாநில அரசுகளின் ஜனநாய உரிமைகளில் ஆளுநர்கள் குறுக்கீடு செய்து வருகிறார்கள்.
அப்படிதான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காழ்புணர்ச்சியுடன் நடந்து கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ”மாநில அரசின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட முடியும். அரசுக்கு ஆளுநர் வீண் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. அது மக்களின் நலன்களை பாதிக்கும். உயரதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமாகும். பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதைமீறி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததும் சட்டவிரோதமாகு. ஆளுநர் தனிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லைஉயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களை பின்பற்ற வேண்டும்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்படும் மசோதாக்கள் மீது 3 மாத காலத்திற்குள் ஆளுநர் கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும். சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும், சில பிரிவுகளில் மூன்று மாதத்திற்குள்லும் ஆளுநர் முடிவு எடுத்தாக வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்கள் விவரம் வருமாறு:-
1. ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல்.
2. கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
3. மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
4. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை.க்கு முதலமைச்சர் வேந்தர் ஆவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல்
5. தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.,க்கு முதலமைச்சரை வேந்தராருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்.
6. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
7. தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
8. தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் இரண்டாம் திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
9. கால்நடை இரண்டாம் திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் .
10. மீன்வள பல்கலைக்கழக இரண்டாம் திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்.