தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 3) பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஆவில் பால், பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, கலப்படமற்றது என்ற சான்று பெற்ற பிறகே, விற்பனைக்கு செல்கிறது.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார், 1 கோடி நுகர்வோர்கள் பயன்பெற்றனர். தற்போது உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, உற்பத்தியாளர்கள் பயன்பெறுகிறார்கள். இதனால், உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் என அனைவருக்கான முதலமைச்சராகவும், நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு, தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையில், ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் 18 மிகப்பெரிய திட்டங்கள் செயலாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக்கணக்கில் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, இடைத்தரகர்கள் சிக்கல் இல்லை, ஊழலுக்கும் வழியில்லை.
தமிழ்நாட்டிலேயே மிகக்குறைந்த விலையில் பால் விநியோகம் செய்யும் ஒரே நிறுவனம், தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம். அப்படியான, இந்நிறுவனத்தின் சார்பில் ரூ.560 கோடிக்கு மேல், உற்பத்தி பொருட்கள் விற்பனையாகிறது. அதில் பால்கோவா, பன்னீர், மோர், இனிப்பு, ரொட்டி, ஐஸ்கிரீம் போன்றவை அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன” என தெரிவித்தார்.