ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை போன்றவர்கள் இருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லந்து யார்டுக்கு இணையானது. அண்ணாமலை போன்ற டுப் போலீஸ் இல்லை. தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையால் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் குறைந்துள்ளது. சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை பாதுகப்பதால் காவல்துறைக்கு தூக்கம் இருக்காதுதான்.
தமிழ்நாட்டின் பி டீம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை போன்றவர்கள் இருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு. அரசியலில் நாகரீகத்தை துறந்து சாலையில் கச்சேரி பாடுபவர்கள் போல் அவர் பேசுவதற்கெல்லாம் பதில் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
எத்தனையோ வழக்குகளை சந்தித்த இயக்கம் தி.மு.க. எங்களுக்கு மடியில் கணமில்லை, அதனால் வழியில் பயமில்லை. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் யாரும் அச்சப்பட்டு வீட்டில் அமரும் இயக்கம் தி.மு.க இல்லை. தேர்தலில் வைப்பு நிதியை தக்கவைத்துக் கொள்ள போராடும் ஒரு கட்சியை பார்த்து நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்.
முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடப் போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். முடிந்தால் அவரை நாள் குறித்து வர சொல்லுங்கள். அந்தப் போராட்டத்தை எப்படி சமாளிப்பது என்று தி.மு.க தொண்டர்களுக்கு தெரியும்.
திருச்செந்தூரில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கோயிலின் பாதுகாப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை. திருச்செந்தூர் கோயிலின் பணிகளுக்கு அவதூறு கற்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மீது சாயம் பூச முற்படுபவர்களின் நாடகம் எடுபடாது. இதுபோன்ற செயல்கள் மூலம் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க நினைத்தால் முதலமைச்சர் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்.” என தெரிவித்துள்ளார்.