தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்- சண்முகத்தம்மாள் தம்பதியருக்கு 27-12-1959 அன்று மகனாக பிறந்தவர் இரா.நாறும்பூநாதன். நெல்லை மாவட்டத்தின் பிரபல எழுத்தாளரான இவர் நெல்லை சாந்திநகரில் வசித்து வந்தார்.
இன்று காலை நடைப்பயிற்சியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 66. மறைந்த நாறும்பூநாதன் கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
பாரத மாநில வங்கியில் 30 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர், இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழுநேரமாக தமிழுக்கு தொண்டாற்றி வந்தார். மாவட்ட கலை மன்றத்தின் உதவிச் செயலாளராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
நண்பர்களுடன் இணைந்து தர்சனா என்ற நாடகக் குழுவை உருவாக்கி ஸருஷ்டி என்னும் நாடக குழுவுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்திய பெருமைக்குரியவர்.
இவருடைய முதல் நூலான கனவில் உதிர்ந்த பூ என்ற நூல் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவையொட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X சமூக வலைதளப்பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருது பெற்றவர். யானை சொப்பனம், திருநெல்வேலி நீர் - நிலம் - மனிதர்கள் உள்ளிட்ட படைப்புகளை தந்தவர். பொருநை இலக்கியத் திருவிழா - நெல்லை புத்தகத்திருவிழா உள்ளிட்டவற்றிற்காக முக்கிய பங்காற்றியவர்.
எழுத்தாளராக மட்டுமன்றி சமூக செயற்பாட்டாளராகவும் பல்வேறு பங்களிப்பினை செய்த திரு.நாறும்பூநாதன் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.