கடன் செயலிகள் மோசடி குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு அறிக்கையை தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்ற தடுப்பு பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ளது.
அதில், தெரிவிக்கப்பட்டுள்ளவை பின்வருமாறு, “சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை சுரண்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பிரைம் லெண்ட் (Prime Lend), கேண்டி கேஷ் (Candy Cash) போன்ற போலி கடன் செயலிகள், பணம் தேவைப்படும் அப்பாவி மக்களை கவர்ந்திழுக்கும், மிகக் குறைந்த வட்டி விகிதங்கள், விரைவான ஒப்புதல் மற்றும் குறைந்தபட்ச காகித வேலைகளுடன் உடனடி கடன்களை வழங்குவதன் மூலம், செயல்முறையை எளிதாகவும் தொந்தரவில்லாமலும் இருப்பது போலக்காட்டுகின்றன.
இது போன்ற போலி கடன்பெறும் செயலிகளை பதிவிறக்கம் செய்து நிறுவும் போது, அவை நம் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மற்ற தொடர்புகள், கேலரி, எஸ்எம்எஸ் மற்றும் பல்வேறு தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகலைக் கோருகின்றன. இதற்கு நாம் “ALLOW” என்று கொடுக்கும் போது நம் கைப்பேசியில் உள்ள ஒட்டுமொத்த தனிப்பட்ட தகவல்களையும் இந்த கடன் செயலிகள் பதிவிறக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கிறோம்.
இது மோசடி செய்பவர்கள் நம் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்த வழிவகை செய்கின்றது. இந்த செயலிகள் மூலம் சிறிய கடன் தொகைகள் எடுக்கப்பட்டவுடன், சில நாட்களுக்குள், மோசடி செய்பவர்கள் அதிகப்படியான பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு கடன் பெற்றவர்களை மிரட்டுகின்றனர்.
அவ்வாறு அதிக பணம் கொடுக்க மறுத்தால், பாதிக்கப்பட்டவர்கள் இடைவிடாத துன்புறுத்தல்களையும், அவர்கள் கைப்பேசியில் இருந்து எடுக்கப்பட்ட அவர்களின் புகைப்படங்களையும் அவர்கள் நண்பர் மற்றும் உறவினர்களின் புகைப்படங்களையும் அசிங்கமான முறையில் சித்தரித்து அவர் கைப்பேசியில் சேமித்திருந்த அனைத்து எண்களுக்கும் அனுப்பிவிடுவோம் என்ற பிளாக்மெயிலையும், பொது அவமானத்தின் அச்சுறுத்தல்களையும் கொடுக்கின்றனர்.
தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் இணையதளத்தில், மோசடி கடன் செயலிகள் தொடர்பாக தமிழ்நாட்டில் மட்டும் 2024 ம் ஆண்டில் 9,873 புகார்களும் 2025ம் ஆண்டில் 3834 புகார்களும் இன்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, கடன் செயலி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முறையான சரிபார்ப்பு இல்லாமல் எளிதான மற்றும் உடனடி கடன்களை உறுதியளிக்கும் சலுகைகளை நம்பவேண்டாம்.
சரிபார்க்கப்படாத கடன் பயன்பாடுகள் தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன மற்றும் மிரட்டி பணம் பறிக்க தவறாகப் பயன்படுத்துகின்றன.
செயலி RBI மூலம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
தொடர்புகள், கேலரி, தொலைபேசி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற தேவையற்ற அனுமதிகளை வழங்குவதைத் தவிர்க்கவும்.
கைபேசிகளில் அவசியமான அனுமதிகளை மட்டுமே அனுமதிக்கவும், அதிகப்படியான கோரிக்கைகளையும் மறுக்கவும்.
முக்கியமான தகவல்களை ஒருபோதும் ஆன்லைனில் பகிர வேண்டாம்.”