இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பள்ளிக் கல்வித்துறையில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்:-
1. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும. ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு.
2. பேராசிரியர் அன்பழகன் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3.2000 பள்ளிகளில் ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
4. 2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும்.
5. 1721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமணம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.
6. நான் முதல்வன் - கல்லூரிக் கனவு திட்டத்தின மூலம் 2000 அரசுப் பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவில் உள்ள புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவார்கள். ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
7. ஈரோடு - சத்தியமங்கலம் - தாளவாடி, தருமபுரி - பாப்பிரெட்டிப்பட்டி, கள்ளக்குறிச்சி - சின்னசேலம், கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி - தளி, நீலகிரி - கோத்தகிரி, திருவண்ணாமலை - ஜவ்வாதுமலை ஆகிய தொலைதூர மலைப் பகுதிகளில் உள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
8. சேலம், கடலூர், திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள் அமைக்கப்படும்.
9. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.3676 கோடி நிதி ஒதுக்கீடு.
10. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு.
”புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால் ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்து வருகிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும் மாணவர்களின் கல்வி ஒருதுளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாநில அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
எந்த தடைகள் எதிர்வரினும் மன உறுதியோடு நம்மை வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடே ஆதரவாய் திரண்டிருக்கும்” என பேரசையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.