நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்திய மினவர்களை ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவையில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்வதும் படகுகளை பறித்துச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இதை குறித்து பேசுவது, ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்துவது மட்டுமன்றி முதலமைச்சர் நேரடியாக கடிதம் எழுதுவது என அனைத்து விதமான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
மீனவர்களின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?. மீனவர் நலனில் அக்கறை கொண்டு, மீன்பிடி உட்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த மூன்றாண்டுகளில் ஒன்றிய அரசு செய்திருக்கும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப உதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
மீனவர்களுக்கென்று அரசு காப்பீட்டுத் திட்டங்கள் உருவாக்கவேண்டும். இதுவரை மீனவர் நலனுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதியின் விவரங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.