உலக மகளிர் தினத்தையொட்டி இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட மகளிர் பயனாளிகளுக்கு 250 ஆட்டோக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள், வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், நன்னிலம் நில உடைமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு நிலப் பத்திரங்கள், நிலம் வாங்குவதற்கான மானியம் மற்றும் வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கு வீடுகள் பெறுவதற்கும், வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் ஆணைகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள், 2025-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது, பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது மற்றும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வேலை செய்யும் பெண்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அது என்னவென்றால், ”வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நாம் தொடங்கிய தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
எனவே காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, R.O. முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அதை அமைக்க இருக்கிறோம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.