திராவிட மாடல் ஆட்சியில் திரைத்துறை சார்ந்த கலைஞர்களின் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது, முத்தமிழறிஞர் கலைஞரின் காலம் தொட்டே தொடர்ந்து வருகிறது.
அவ்வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் சென்னையை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் நிலம், திரைத்துறை கலைஞர்களுக்கான வீட்டு மனைக்காக குத்தகைக்கு விடப்பட்டது. எனினும், மனைகள் கட்ட காலம் தாழ்ந்த காரணத்தால் அரசாணையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.
இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அரசாணையில் உடனடி திருத்தம் செய்யப்பட்டு அதற்கான திருத்த ஆணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறை சங்கத்தினரிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கலைத்துறையின் வளர்ச்சிக்கும் – அது சார்ந்த கலைஞர்கள் உட்பட அத்தனைப் பேரின் நலனுக்கும் அயராது உழைத்து வருகிறது.
அந்த வகையில், 2010-ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தின் போது, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் - தென்னிந்திய நடிகர்கள் சங்கம் - தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் நலன் கருதி குடியிருப்பு கட்டடங்களை கட்டிக் கொள்ள ஏதுவாக சென்னையை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணைப்படி, மூன்று ஆண்டுகளில் அங்கே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பயனாளிகளால் குடியிருப்புகளைக் கட்ட இயலாத காரணத்தால், அரசாணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
கட்டுமானங்களை மேற்கொள்ள அரசாணையில் திருத்தம் வேண்டும் என்ற திரைத்துறையினரின் கோரிக்கையை முந்தைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்தச் சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். அதன்படி ஆய்வுப்பணிகள் - சட்ட ரீதியான ஆலோசனைகள் உள்ளிட்டவை நம் திராவிட மாடல் அரசால் மேற்கொள்ளப்பட்டன.
இதனடிப்படையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய அதே 90 ஏக்கர் நிலத்தை மேற்கண்ட சங்கத்தினருக்கு குத்தகைக்கு வழங்கிடும் வண்ணம் திருத்திய அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் நகலை இன்று திரைத்துறை - சின்னத்திரை சார்ந்த சங்க நிர்வாகிகளிடம் நேரில் ஒப்படைத்தோம்.
இதன் மூலம் 40 ஆயிரம் கலைஞர்கள் பயனடையவுள்ளனர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர்கள் அத்தனைப் பேருக்கும் என் அன்பும், வாழ்த்தும்” என பதிவிட்டுள்ளார்.