தந்தை பெரியாரை சீமான் விமர்சித்து பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகளுக்கு தொடர்புள்ளவர்கள் சீமானின் பொய்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சீமான் பிரபாகரனோடு இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டியளித்திருந்தார். அதேபோல பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் மற்றும் எல்லாளன் திரைப்படத்திற்காக 7 மாத காலம் விடுதலைப்புலிகளுடன் இருந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் ஆகியோர் சீமானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், விடுதலை புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அ"ன்புக்கும் பெரு மதிப்புக்குரிய தமிழீழ மக்களே, புலம்பெயர் உறவுகளே, தமிழக உறவுகளே!
கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக எமது ஈழ விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் இழந்து இலங்கை அரசோடு இணைந்து சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் 2009-ம் ஆண்டின் இறுதியில் எமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் தாயகம் நோக்கிய பயணத்தில் எமது அரசியல் வழி போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், பல தடைகளையும் தாண்டி எமது விடுதலை நோக்கிய பயணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். எமது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்தும் மாவீரர்களின் அர்ப்பணிப்பில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகங்களிலிருந்தும் கட்டி எழுப்பப்பட்ட எமது தாயக விடுதலைப் பயணத்தில் நாங்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் எமது தாயகம் நோக்கிய பயணத்தை சர்வதேச பூகோள அரசியல் நலன் கருதி சர்வதேச சக்திகளும், இலங்கை அரசும் திட்டமிட்ட வகையில் ஒருங்கிணைந்து நசுக்க முற்படுவதுடன், எமது போராட்ட வரலாற்றையும், ஈழத் தமிழ் மக்களுடைய கலாச்சார விழுமியங்களையும் இல்லாத தொழில்க்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். பல காலகட்டங்களில் எமது அண்டை நாடான இந்தியாவோடும், தமிழகத் தமிழர்களோடும் பின்னி பிணைந்து ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று தொட்டு இன்று வரை நேசக்கரம் கூப்பி அனுசரித்து எமது போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி வருகின்றோம். விடுதலைப் புலிகள் இயக்கமாகிய நாங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எமது இயக்கத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் எந்த நோக்கத்துக்காகவும் யாருக்காகவும் நாம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். தனிநபர் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் முன்னிறுத்தி செய்யப்படுகின்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
ஈழத் தமிழ் மக்களின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வேறு இந்திய தமிழர்களின் தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வேறு என்பதையும், தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்ப்வினையாற்றவோ, அவர்களின் செயற்பாடுகளுக்கு கருத்து கூறவோ நாம் விரும்பவில்லை. இது எங்கள் தேசிய தலைவரின் நிலைப்பாடும் அல்ல என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.
நாங்கள் இந்தியாவுக்கோ, தமிழக மக்களுக்கோ என்றும் எதிரானவர்கள் அல்ல மாறாக எமது விடுதலைப் போராட்டத்திற்கு பின்னால் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது எமது இயக்கமோ, ஈழத் தமிழ் மக்களோ அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள் என்பதையும், எமது போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்கு மிகவும் விலைமதிப்பற்ற தியாகம் நிறைந்த அர்ப்பணிப்புகளையும் நன்றி உணர்வோடு பற்றிக் கொள்ள விரும்புகிறோம். தேசியத் தலைவர் அவர்கள் திராவிட இயக்கங்களோடு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதையும் இந்த வேளையில் பதிவு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்ளுகின்றோம்.
விடுதலைப் புலிகளின் கொள்கை தொடர்பாக அண்மையில் வெளிவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், அரசியல் துறை என்று பேரிடப்பட்ட அறிக்கை தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். சம்பந்தப்பட்ட அறிக்கைகும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எந்தவித தொடருர்பும் இல்லை என்பதையும், திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகிய நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
விடுதலை புலிகளின் பெயரைப் பயன்படுத்தி எமது இயக்கத்தின் பேச்சாளர்களைப் போன்று ஊடகங்களில் கருத்து கூறுவதை சம்பந்தப்பட்ட நபர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகள் தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒரு கொதி நிலையை உருவாக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற கருத்துக்கள். ஏற்புடையதல்ல என்றும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்ந்த உலகப் பரப்பில் தவறான செயற்பாடுகளுக்கோ, அரசியல் செயற்பாட்டுக்கோ பயன்படுத்த முடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் விரும்புகின்றோம். நாங்கள் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
ஆகவே பொய்ப் பிரச்சாரங்களையும், பொய்யான புகைப்படங்களையும், பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், எமது தேசியத் தலைவரையும், விடுதலைக்கான பயணத்தையும் மழுங்கடிக்கும் நோக்கத்தோடு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் மோசடிகள் எமக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்பதனையும், இன்று பலராலும் பேசப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறது.
விடுதலைக்குப் புலிகளின் பெயராலோ, தேசியத் தலைவரின் பெயராலோ, தமிழ் தேசியம் என்ற பேரிலும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி பங்களிப்பு வழங்க வேண்டாம் என்றும், இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்காது என்பதையும் மிகவும் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" " என்று கூறப்பட்டுள்ளது.