தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
மொத்தம் 10 சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், மொத்தம் 930 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு முதல் முதலமைச்சர் சார்பில் பரிசாக கார் வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த மஞ்சம்பட்டி துளசி என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதே போல 11 மாடுகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்த பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபா என்ற மாடுபிடி வீரருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக சத்திரபட்டியைச் சேர்ந்த விஜய தங்கபாண்டி என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.