தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 1100 காளைகள், 900மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சுற்றுக்கு 50 பேர் என போட்டியில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு தொடங்கியதில் இருந்து காளைகளை வீரர்கள் வீரமுடன் அடக்க, சில காளைகள் யாரிடமும் அகப்படாமல் தப்பின.
பகல் முழுவதும் கலகலப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி (301) முதலிடத்தையும், 15 காளைகள் அடக்கி குன்னத்தூர் அரவிந்த் திவாகர் (139) இரண்டாம் இடத்தையும், 14 காளைகளை அடக்கி திருப்புவனம் முரளிதரன் (228) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
முதலமைச்சர் சார்பாக சிறந்த காளைக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள டிராக்டரும், துணை முதலமைச்சர் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு எட்டு லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றும் பரிசும் வழங்கப்பட்டன. அதே போல இரண்டாம் இடம் பிடிக்கும் சிறந்த காளைக்கும் மாடுபிடி வீரர்க்கும் தலா ஒரு பைக் பரிசாக வழங்கப்பட்டது.