தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஏராளமான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் புத்தகப் பிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புத்தகக் கண்காட்சி பயன் உள்ளதாக அமைகிறது. அவ்வகையில், சென்னை புத்தகக் கண்காட்சி பலராலும் விரும்பப் படும் ஒன்றாக உள்ளது.
அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிற்கான 48 வது புத்தகக் கண்காட்சி கடந்த டிசம்பர் 27ஆம் நாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது
சுமார் 17 நாட்கள் நடந்த இப்புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெற்று வந்தது.
தமிழ்நாடு பாடநூல் கழகம், உட்பட மொத்தம் 10 அரசு துறைகளும் கண்காட்சியில் அரங்குகள் அமைத்தன. முதன் முறையாக இந்து சமய அறநிலைய துறையும் அரங்கு அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புத்தகக் கண்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு நாளும் நடைபெற்றது.
பொதுமக்களின் வசதிக்காக சுமார் 15,000 கார்கள் மற்றும் 50,000 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவிற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வார இறுதி நாளான இன்றுடன் (ஜனவரி 12) புத்தகக் காட்சி, பெரும் மக்கள் வருகைக்கு அடுத்து நிறைவடைந்துள்ளது.