வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறையில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நேரம் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து பணியின் போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 24 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிவதற்கு புதிய செயலி உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது நிலத்திற்கு உண்டான நில அளவை மற்றும் புவிசார் விவரங்களை கைபேசியில் அறியும் வகையில் தமிழ் நிலம் புவிசார் தகவல் (TamilNilam Geo-Info) என்னும் கைபேசி செயலியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் நிலத்தினை வரைபடத்தில் தேர்வு செய்தவுடன் அந்த நிலத்திற்கு உண்டான நில அளவை எண் பரப்பு மற்றும் நில அளவை உரிமையாளர் போன்ற விவரங்களுடன் புவிசார் தகவலை தங்களது கைபேசி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் நில அளவை எண் புல வரைபடம் பட்டா எண் அல்லது பதிவேடு மற்றும் சிட்டா போன்ற விவரங்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெரும் நிலையினை தவிர்த்து இந்த செயலி மூலமாகவே எளிதாக அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது, "உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் இல்லத்தில் ஒரு அசம்பாவிதமான சம்பவம் ஏற்பட்ட காரணத்தால் உங்களுக்கு இந்த பணிகளை வழங்கி இருக்கின்றோம்.
இந்தப் பணி தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி பல்வேறு போட்டிகளுக்கு பின்பு தான் உங்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்த தியாகத்தால் இந்த பணி உங்களுக்கு எளிதாக கிடைத்து விட்டது. ஆகையால் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி இந்த துறைக்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும்
புதிதாக ஒரு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். எந்த ஒரு பணியாக இருந்தாலும், தாலுகா அலுவலகத்திற்கு வந்தால்தான் பணி நடக்கும் என்ற சூழ்நிலை இருந்தது. இனி தங்கள் வீட்டில் இருந்தே தங்கள் நிலங்களின் விவரங்களை கைப்பசி மூலமாகவே அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிலம் குறித்த பிரச்சினைகள்தான் நமக்கு ஏற்பட்டு வந்தது. நில அளவைத் துறை வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது இன்னும் வேகமாக முன்னேற வேண்டும் நிறைய பட்டாக்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு நிறைவான சேவை செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்கின்ற நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்யாமல் அலைக்கழிக்காமல் அவர்களது வேலையை செய்து கொடுக்க துணையாக இந்த துறை இருக்க வேண்டும்” என்றார்.