தமிழ்நாடு

“நெல்லையில் இயல்புநிலை திரும்பும் வகையில் மீட்பு நடவடிக்கை” - அமைச்சர் கே.என்.நேரு களத்தில் ஆய்வு !

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் மழைநீர் சூழந்த பகுதிகளிலும், வாழைப் பயிர்கள் சேதம் அடைந்துள்ள பகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு.

“நெல்லையில் இயல்புநிலை திரும்பும் வகையில் மீட்பு நடவடிக்கை” - அமைச்சர் கே.என்.நேரு களத்தில் ஆய்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பதிவானதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையொட்டி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று (13.12.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்து தேவையான அறிவுரைகள் வழங்கினார்.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும், அணைகளில் இருந்து நீரினை திறந்து விடும் போது பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனைத்தொடர்ந்து கனமழை பெய்துவரும் பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்டத்தில் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை நீடித்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. விவசாய பயிர்களும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் கே.என்.நேரு இரண்டு நாட்களாக நெல்லையில் முகாமிட்டு சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் முக்கூடல், பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் மற்றும் கிரியம்மாள்புரம், சக்தி குளம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து சேதம் அடைந்துள்ளது. அந்த பாதிப்படைந்த பயிர்களையும் பார்வையிட்டு விவசாயிகளிடமும் வாழை சேதம் அடைந்தது குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, விக்ரமசிங்கபுரம் பகுதியில் சேதமடைந்த பாலம் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணியையும் பார்வையிட்டார். முன்னதாக அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மழை வெள்ளத்தால் வீடுகள் சேதம் அடைந்த ஆறு பயனாளிகளுக்கு அமைச்சர் கே என் நேரு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து சேர்வலாறு அணை பகுதிக்கு சென்று அணையை பார்வையிட்டு நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் மழைநீர் சூழ்ந்த செம்பருத்தி மேடு பகுதியையும் பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்பும் வகையில் அனைத்து பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

banner

Related Stories

Related Stories