திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பலரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4 மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று (டிச.12) இரவு 9 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் சிகிச்சைக்கு உடனிருந்தவர்கள், மருத்துவ பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை உள்ளே சிக்கிக் கொண்டனர்.
தீ விபத்தை கண்ட சிலர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்த அவர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்குள் சிக்கியுள்ளனவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் கடுமையான காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் உதவியோடு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனையின் மற்றோரு லிப்டில் சிக்கியிருந்த சிறுவன் உட்பட 8 பேரை தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, பழநி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் விபத்து நடந்த மருத்துவமனைக்கு விரைந்தனர். தீ விபத்து தொடர்பான விவரங்களை கேட்டறிந்த அவர்கள், அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் நலம் விசாரித்தனர். பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்துக்கு காரணம், ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு என்றும், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து பரவியது என்றும் கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-12-2024) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30) த/பெ.ஜெகநாதன், மாரியம்மாள் (வயது 50) க/பெ.ஜெகநாதன், தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (வயது 50) த/பெ. கந்தசாமி, சுப்புலட்சுமி (வயது 45) க/பெ.சுருளி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 36) த/பெ.ராஜேந்திரன், செல்வி.கோபிகா (வயது 6) த/பெ. ராஜசேகர் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.