சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நதியா. இவர் சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் விற்பனை மற்றும் பழுது நீக்கும் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தங்கள் நிறுவனத்திற்கு சர்வீஸ் செய்வதற்காக வரும் கார்களின் வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்தை தவறான கணக்கு எழுதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து நிறுவனத்தின் ஊழியர்கள் மூலம் தகவல் தெரிந்து கொண்ட நிறுவன உயர் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது கடந்த 6 மாதங்களக 111 வாடிக்கையாளர்களின் வாகனங்களை பழுது பார்த்தபோது செலுத்திய பணத்தை, நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், பகுதி பகுதியாக ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 82 பணத்தை கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அந்நிறுவனத்தின் மேலாளர் இளவரசன், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நதியாவிடம் விசாரணை மேற்கொள்ள முனைப்புக் காட்டினர். ஆனால் நதியா தலைமறைவாகிவிட்டார்.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரித்ததில், நதியா தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் நேற்று (டிச.07) தஞ்சாவூர் சென்று அங்கு பதுங்கி இருந்த நதியாவை கைது செய்தனர்.
தொடர்ந்து நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று வருடத்திற்கு மேலாக, தான் வேலை பார்த்த நிறுவனத்திலேயே மோசடி செய்து ரூ.12 லட்சம் பணத்தை கையாடல் செய்த இளம்பெண் கைதான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.