முதலாளித்துவ கருத்தியலை அடிப்படையாக வைத்து ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி செய்து வருவதால், சிறுபான்மையினரும், உழைக்கும் சமூகத்தினரும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அவ்வாறு இன்னல்களை சந்திப்பவர்களில், விவசாய பெருமக்கள் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக விலைவாசி உச்சம் தொட்டு வரும் வேளையில், குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க உயிரை கொடுத்து போராடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க கூட தயங்கி வருகிறது. இதனால், இன்று (டிசம்பர் 8) மீண்டும் டெல்லி நோக்கி முற்றுகை போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத பா.ஜ.க மாநில, ஒன்றிய அரசுகள் எல்லைகளை மூடி, விவசாயிகள் போராட்டத்தை ஊடகவியலாளர்கள் பதிவு செய்ய தடை விதித்து பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இதற்கிடையே, விவசாய பெருமக்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தாலேவால், பஞ்சாப்பின் கனோரி எல்லையில் பதிமூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.