தமிழ்நாடு

கொடநாடு வழக்கு - எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு வழக்கு - எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும் என வாதிட்டார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சம்பந்தமில்லாமல் முதல்வருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார் கொடநாடு கொலை , கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லையே, எதிர் தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்ட அனைவரையும் எதிர் தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories