ஃபெஞ்சல் புயல் டிசம்பர் 1 ஆம் தேதி கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடந்த மூன்று நாட்களாக தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இன்று கடலூர் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்,கடலூர் மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பிடத் தேவையான அனைத்துப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, மழைநீர் தேங்குவதால் பரவுகிற தொற்றுநோயிலிருந்து மக்களை காக்கின்ற வண்ணம், தொடர் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும், வெள்ள பாதிப்புக்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ள நிலையில், வீடு - வேளாண் நிலங்கள் - கால்நடைகள் என பாதிப்பின் நிலவரத்தை உடனுக்குடன் கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். இந்த இடர்மிகு நேரத்தில் நம் திராவிட மாடல் அரசு மக்களுடன் மக்களாக நிற்கும் என்கிற வகையில் செயலாற்றிட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.