திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் 'உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட இவ்விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு 96 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்.37 லட்சத்து 52 ஆயிரத்து 563 மிப்பீலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் நடத்தி முடிக்கப்பட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகளை பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். அதுபோல மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கேடயங்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை தன்னகத்தே வைத்திருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய வழிகாட்டுதலின் பேரில், மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை முதலமைச்சர் தற்போதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
எத்தனை துறைகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் மனதிற்கு நெருக்கமான துறையாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இருக்கிறது. எதிரே அமர்ந்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுடைய பெற்றோர்களை கடவுளாக தெய்வமாக நாங்கள் பார்க்கிறோம்.
எங்களுக்கு தன்னம்பிக்கையை கற்றுத்தரும் ஆசிரியர்களாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளும், சிறப்பு குழந்தைகளும் இருக்கிறார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் காலம் தொட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நல வாரியம், கல்வி உதவித்தொகை, இலவச உயர் கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை நமது அரசு வழங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை ரசிப்பதற்கும், கடல் நீரில் தங்களது கால்களை நனைப்பதற்கும், பாதை வகுத்துக் கொடுத்தவர் நமது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவர்கள் அங்கு சென்றுவர ஏதுவாக சிறப்பு பேருந்தையும் வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்யக்கூடிய அரசாக நமது திராவிட மாடல் அரசு திகழ்கிறது” என்று கூறினார்.