முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கள ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஏறக்குறைய நாள்தோறும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பெரிய நரியங்குடி, அகஸ்தியன் பள்ளி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பாய், போர்வை மற்றும் மாளிகை பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளி மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் சுமார் 5,400 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் மழை வெள்ளம் வடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரண வழங்க முதலமைச்சர் உறுதியாக நடவடிக்கை எடுப்பார்” என தெரிவித்தார்.