சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றது முதல் சென்னையில் ரவுடியிசம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நேற்று (அக்டோபர் 17) மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, “மாநகர காவல் ஆணையரின் பத்திரிகையாளர் சந்திப்பானது குற்றங்களின் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் தாக்கம் குறித்தே பேசியதாகவும், சில ரவுடிகள் வேறு மொழி பேசுபவர்களாய் இருப்பதால், அவர்கள் மொழியில் பேசுவது என்பது தவறில்லை என்பதால், இது மனித உரிமை மீறல் ஆகாது” எனவும் வில்சன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் புரிந்து கொள்ளச் செய்வதே இதன் நோக்கம் மற்றும் அதற்குமேல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அனுமானிக்கவோ அல்லது வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது எனவும் அவர் வாதிட்டார்.
ஒரு காவல் ஆணையர் என்பவர் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து முறையான காவல் கண்காணிப்புப் பணி செய்யப்படும் என்று காவல் ஆணையர் தெளிவுபடுத்தினார்.
அதுமட்டுமின்றி, காவல்துறை ஆணையர் அவர்கள் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை அமைப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், காவல்துறை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை ஆகியவற்றை அறிந்திருப்பதாகவும், எனவே காவல் ஆணையரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது என்றும் வில்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்களுடைய வாதங்களை ஏற்று, மாநில மனித உரிமைகள் ஆணையமானது, இந்த வழக்கில் இருந்து காவல் ஆணையர் அருண் பெயரை நீக்கியது.
பி.வில்சன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் காரணமாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து மாநகர காவல் ஆணையருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.