எழுத்தாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் இன்று பெங்களூருவில் காலமானார். இதனைத் தொடர்ந்து முரசொலி செல்வம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்." என கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
”மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் முரசொலி செல்வம் இன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெருந் துயரத்திற்கு ஆளானோம். 50 ஆண்டு காலம் ‘முரசொலி’க்குத் தூணாக இருந்தவர். கருத்துரிமைக்காக தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூண்டில் நிறுத்தப்பட்டவர் – அப்பொழுதும் கம்பீரமாக நின்ற துணிச்சல்காரர்.”
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
”முரசொலி செல்வம் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். முரசொலி பத்திரிகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி அந்நாளிதழை மேம்படுத்தியவர். சிலந்தி என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி, திராவிட இயக்க கொள்கைகளை பரப்பியவர். முரசொலிக்கு எதிரான ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும், வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர். முரசொலி செல்வம் மறைவு திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், முரசொலி நாளேட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.”
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
“தி.மு.கழகத்தை கல்லூரி மாணவர்களின் பாசறையாக உருவாக்கி எண்ணற்ற இளைஞர்களை மொழி உரிமை காக்கும் போராளிகளாக வார்ப்பித்து அண்ணாவும், கலைஞரும் கண்ட கனவை நனவாக்கும் பணியில் முழு மூச்சுடன் செயல்பட்ட திராவிட இயக்க கொள்கை வேழம்தான் முரசொலி செல்வம் ஆவார். முரசொலி செல்வம் அவர்களின் மறைவு, முரசொலி ஏட்டிற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்திற்கே பேரிழப்பாகும்."
CPIM மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
“சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக முரசொலி பத்திரிகைக்கு பங்களிப்பு செய்து, ஏராளமான அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியவர் முரசொலி செல்வம். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பு சாசனம் ஆகியவற்றை பாதுகாக்கவும், மதவெறி கொள்கைகளுக்கு எதிராகவும் தனது எழுத்துக்கள் மூலம் உறுதியாக போராடியவர். துணிச்சல்மிக்க எழுத்தாளர். அவரது மறைவு பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.”
CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
”முரசொலி செல்வம் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் துயரச் செய்தியாகும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக முரசொலியில் முழுப்பொறுப்பேற்று அதன் ஆசிரியராக, கட்டுரையாளராக பணியாற்றி வந்தவர்.முரசொலியின் சார்பில் சிறப்பு மலர்கள் வெளியிடுகின்ற போது, கட்டுரை கேட்டு கடிதம் அனுப்புவது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கட்டுரை கேட்பதும், மீண்டும், மீண்டும் நினைவூட்டி பேசுவதும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. திமுகவில் மிகுந்த கொள்கை பிடிப்போடு பணியாற்றியவர்.”
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா
"சிறந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான முரசொலி செல்வம், தனது எழுத்தில் நகைச்சுவையோடு கொள்கையை பரப்பியவர். முரசொலியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பெருமைக்குரியவர். இதழியல் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு எதேச்சதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, துணிவோடு சட்டமன்றத்தில் கூண்டில் நின்று நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர்.”