இந்திய பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு, 2023 - 24 நிதியாண்டில் 13.7 விழுக்காடு வளர்ச்சியுடன், நாட்டின் 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக நீடிக்கிறது என ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தகவல்.
திராவிட மாடல் ஆட்சிக்கு பின், துவண்டிருந்த தமிழ்நாட்டின் பல துறைகள் மறுமலர்ச்சி கண்டு, பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அவற்றில் குறிப்பாக தொழில் துறையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டு மாநாடு என தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டு, உலகளாவிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதனால், வேலைவாய்ப்புகளும் பெருமளவில் வளர்ந்தன, தனி நபர் வருமானமும் அதிகரித்தது. இதனை கடந்த மாதம் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பும் பாராட்டியது.
இந்நிலையில், ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 32,400 கோடி அமெரிக்க டாலராக உள்ளது. அதாவது தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 33 விழுக்காடு தமிழ்நாட்டை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் சுமார் ரூ. 3.53 இலட்சமாகவும் இருக்கிறது என தகவலளித்துள்ளது. இதனால், 2023 - 24 நிதியாண்டில் 13.7 விழுக்காடு வளர்ச்சியுடன், நாட்டின் 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு நீடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.