திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இரு நாட்கள் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றினர்.
அதனை தொடர்ந்துபிரதான நுழைவுவாயிலை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகராபு, சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர்கள் முன்னிலையில் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் 100அடி கொடிக்கம்பத்தில் மாநாட்டு கொடியேற்றினார். அடுத்த நிகழ்வாக முருகன் கண்காட்சி அரங்கினை அமைச்சர் ஐ.பெரியசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் விழா மேடையில் காணொலி வாயிலாக இணைந்து தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உரையாற்றினார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆன்மீகப் பெரியோர்கள், நீதி அரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என பலர் உரையாற்றினர்.
மாநாட்டில் 2 நாட்களும் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், பல்துறை சார்ந்தவர்களின் உரை , சிந்தனை மேடை, நாட்டியம்,வாய்பாட்டு, பக்தி இசை, கருத்தரங்கு, பல்வேறு வகையிலான இசை நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியம், நாடகம் , சிறுமி தியா இசை நிகழ்ச்சி, வீரமணி ராஜீ, சுதா ரகுநாதன் நிகழ்ச்சி, 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளி கும்மி, படுகர் நடனம், தப்பாட்டம்,கரகாட்டம் , பொய்கால் நடனம், காவடியாட்டம் என திருவிழாவை போல இந்த நிகழ்வு நடைபெற்றது.
இரு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. அப்போதுபோகர் சித்தர் விருது மருத்துவர் கு.சிவராமன் அவர்களுக்கும், நக்கீரர் விருது முனைவர் பெ. சுப்பிரமணியம் அவர்களுக்கும், அருணகிரிநாதர் இயல் விருது திருப்புகழ் மதிவண்ணன் அவர்களுக்கும், அருணகிரிநாதர் இசை விருது திரு.வி.சம்பந்தம் குருக்கள் அவர்களுக்கும், முருகம்மையார் விருது மறவன்புலவு திரு.க.சச்சிதானந்தன் அவர்களுக்கும், குமரகுருபர சுவாமிகள் விருது முனைவர் பனசை மூர்த்தி அவர்களுக்கும், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் விருது திரு.பா.மாசிலாமணி அவர்களுக்கும், பகழிக்கூத்தர் விருது திரு.ஜெ.கனகராஜ் அவர்களுக்கும், கந்தபுராணக் கட்சியப்பர் விருது மருத்துவர் வ. ஜெயபாலன் அவர்களுக்கும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விருது முனைவர் ந.சொக்கலிங்கம் அவர்களுக்கும், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் விருது முனைவர் புலவர் அமுதன் அவர்களுக்கும், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விருது முனைவர் சே. பார்த்தசாரதி அவர்களுக்கும், பாம்பன் சுவாமிகள் விருது திரு.தா.சந்திரசேகரன் அவர்களுக்கும், தணிகைமணி வா.சு. செங்கல்வராயர் விருது முனைவர் வ.வெ.சசிவல்லி அவர்களுக்கும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் விருது பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் அவர்களுக்கும், தேனூர் வரகவி வே.செ. சொக்கலிங்கனார் விருது திரு.மா. திருநாவுக்கரசர் அவர்களுக்கும் என மொத்தம் 16 பேருக்கு விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநாட்டில் 21 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு நடைபெற்ற வரும் பழனியாண்டவர் கல்லூரியில் 4.40 ஏக்கர் பரப்பளவு மைதானத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கம், 500 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவு கூடம், 200 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் 3டி திரையரங்கம், அறுபடை வீடு கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. 39 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 1,003 பேர் ஆய்வு கட்டுகட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டை முன்னிரு அமைக்கப்பட்ட முருகன் கண்காட்சி பக்தர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. இதன் காரணமாக கண்காட்சி மற்றும் VR காட்சிகள் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.