பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம் உட்பட 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட மலர்கொடு சென்னை திருவல்லிக்கேணி மேற்குப் பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் த.மா.கா.வில் மாநில மாணவரணி துணைத் தலைவராக உள்ளார். மேலும் இதில் பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அஞ்சலையை தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால் பொற்கொடி ஆந்திராவில் பதுங்கியிருந்த நிலையில், அவரை சுற்றிவளைத்து போலீசார் இன்று கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலையில் அவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் பொற்கொடிக்கு செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.