கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், குறிப்பிட்ட சமூக மக்களை இழிவாக பாடல் படி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிபதியால் கண்டிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில் தற்போது அக்கட்சியின் தலைவர் சீமான், பொதுமேடையில் ஆபாச வார்த்தைகளில் பேசி மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சென்னையில் கடந்த 4-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தனது எல்லையை மீறி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளார். வார்த்தைக்கு வார்த்தை ஆபாச வார்த்தை பேசியதோடு, காளியம்மாள் விவகாரத்தை பற்றியும் பேசினார். மேலும் காவல்துறையினரை பற்றியும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார்.
அதுமட்டுமின்றி, கலைஞர் குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார். இவரது பேச்சு, அக்கட்சியினரே முகம்சுழிக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து இவரது பேச்சுக்கு திருச்சி எஸ்.பி.வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தொடர்ந்து சீமான் பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் சட்டத்துறையின் தலைவரும் வழக்கறிஞருமான கனகராஜ் இன்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வெளியே வந்த கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது வருமாறு:
"மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக தொடர்ந்து பேசி வருவது கண்டிக்கத்தக்கது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் மிகவும் இழிவாக சீமான் பேசி உள்ளார். அதைபோல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் வைத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கடனாளிதான் சீமான். காங்கிரஸ் கட்சி குறித்தும் இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. தமிழக இளைஞர்களை மூளை சலவை செய்து தமிழகத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் சீமான் செயல்பட்டு வருகிறார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி குறித்தும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் சீமானை கண்டிக்கிறோம்.
சீமான் நடத்தும் போராட்டத்திற்கும் காவல்துறை இனிமேல் அனுமதி கொடுக்கும் போது என்னென்ன பேச வேண்டும் என்பது தொடர்பாக எழுதி வாங்க வேண்டும். மேலும் சீமான் மீது சட்டரீதியிலான நடவடிக்கை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.