.jpg?auto=format%2Ccompress)
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் பெண்கள் வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில், பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் ‘விடியல் பயண திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. முதலமைச்சராக பதவியேற்றதும் முதல் 5 கையெழுத்துகளில் மகளிர் பேருந்து திட்டத்துக்கான கையெழுத்தும் இடம்பெற்றது.
இந்த திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இதனால், சராசரியாக பெண் ஒருவருக்கு மாதம் ரூ.800 சேமிக்க உதவுகிறது. இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு சத்தான உணவுகளை வாங்குவது முதல் பல அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
.jpeg?auto=format%2Ccompress)
இல்லத்தரசிகள், முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் விடியல் பயணத்தால் பயன்பெற்று வருகிறார்கள். இந்த மகத்தான திட்டம் மூலம் வீட்டில் முடங்கியிருக்கும் பெண்களும் தற்போது வெளியே வர முடிகிறது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு கழக அரசு இதுவரை பல விஷயங்களை முன்னெடுத்து செல்லும் நிலையில், இந்த விடியல் பயணத் திட்டம் அவர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் பலனை பலரும் கண்கூட பார்த்து உணர முடிவதால்தான் இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது. திராவிட மாடல் ஆட்சியை பலரும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளனர். பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கும் கழக ஆட்சியில் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படி பட்ட இந்த திட்டத்தை மகளிர் மட்டுமல்லாது பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வியந்து பாராட்டியுள்ளார்.
Mike Okay என்ற Youtube சேனல் நடத்தி வரும் வாலிபர் ஒருவர், இந்தியாவில் கடந்த சில மாத காலமாக சுற்றித்திரிந்து, வீடியோ எடுத்து பதிவேற்றி வருகிறார். வட மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள் என சுற்றி முடித்துவிட்டு, தென்னிந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நாகர்கோவிலுக்கு சுற்றி பார்க்க சென்றிருந்த அவர், அதனை வீடியோவாகவும் எடுத்திருந்தார்.
அந்த வீடியோவில், அனைத்து பேருந்து நிலையங்களில் பெண்கள் மட்டுமே தென் படுவதாகவும், ஆண்கள் பலரையும் காணவில்லை என்றும் பேசியிருந்தார். மேலும் பெண்கள் ஏன் அனைத்து பேருந்துகளிலும் அதிகமாக இருக்கிறார்கள் என்ற காரணமும் புரியவில்லை என்று பேசியிருந்தார். தொடர்ந்து வேறு பகுதிக்கு சென்ற அவர், அங்கிருக்கும் பெண்களிடம் இதுகுறித்த கேள்வியையும் கேட்டிருந்தார்.
.jpg?auto=format%2Ccompress)
அப்போது அந்த பெண்கள், தமிழ்நாட்டில் மட்டும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து வழங்கப்படுவதாகவும், இதனால் பெண்கள் பெருமளவு பணம் சேமிக்க முடிவதாகவும், வீட்டில் இருந்து வெளியே வர முடிவதாகவும், இது தமிழ்நாடு அரசு பெண்களுக்காக பெண்கள் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட திட்டம் என்றும் விளக்கம் அளித்தனர்.
மேலும் பெண்களுக்கு நிதி ரீதியாக இது பெரும் உதவி புரிவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இது ஒரு மிகச்சிறந்த திட்டம் எனவும், இதுபோல் இங்கிலாந்தில் கொண்டு வர முடியாது எனவும் அந்த வெளிநாட்டு பயணி தெரிவித்தார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் பலரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








