தமிழ்நாடு

கள்ளச்சாராயம் விற்றால் தண்டனை என்ன? - தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் !

கள்ளச்சாராயம் விற்றால் தண்டனை என்ன? - தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்றுடன் (ஜூன் 29) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிநாளான இன்று மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வகையில் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி இந்த தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்டத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த திருத்த சட்டத்தின்படி கள்ளச்சாராயம் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தண்டனைகளை விட அதிக தண்டனை வழங்கப்படும்.

கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போதுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி, விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதிசெய்வது, அருந்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் விற்றால் தண்டனை என்ன? - தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் !

ஆனால் மனித உயிருக்கு கேடு விளைக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், பதுக்கி வைத்திருத்தல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு இந்த சட்டம் போதுமானதாக இல்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை திருத்தி மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. ஏனெனில் கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் உயிரிழப்பு நேர்கிறது. எனவே இதனை தடுக்க இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பது அவசியம் என்ற நோக்கில், சட்டத்திருத்த மசோதாவில் தண்டனை உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனையின் கால அளவும், தண்டனைத் தொகையினுடைய அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுவகை, மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிகப்பதற்காக கொண்டு செல்வதற்கும், வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கள்ளச்சாராயம் விற்றால் தண்டனை என்ன? - தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் !

தொடர்ந்து கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அதை தயாரித்தல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த குற்றங்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்வதோடு, மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணைமுறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதுபோன்ற குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை, அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யும் வகையில் சட்டதிருத்தத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்த சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories