தமிழ்நாடு

“ரூ.1146 கோடியில் 6,746 குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்” : பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

“ரூ.1146 கோடியில் 6,746 குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்” : பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த விதி எண்.110-ன்கீழான அறிக்கை

முதலமைச்சர்:  பேரவைத் தலைவர் அவர்களே, விதி 110-ன்கீழ் அறிக்கை ஒன்றை அவையிலே எடுத்து வைக்க அனுமதி தந்த தங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பேரவைத் தலைவர் அவர்களே, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணா வழி நடந்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புரங்களில் வசிக்கும் ஏழையெளிய மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழச் சிறந்த பல திட்டங்களை உருவாக்கி வருகிறது.  

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்ட மேம்பாட்டு வாரியப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இதுவரை 29 ஆயிரத்து 439 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 1 இலட்சத்து 70 ஆயிரத்து 462 தனி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 172 திட்டப் பகுதிகளில் 79 ஆயிரத்து 94 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 89 ஆயிரத்து 429 தனி வீடுகளுக்கான   கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளுக்காக 6 ஆயிரத்து 685 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

“ரூ.1146 கோடியில் 6,746 குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்” : பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணியில் மட்டும் கவனம் செலுத்தி, அத்துடன் நின்றுவிடாமல், இந்த அரசு பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறுசீரமைப்பிலும் கவனம் செலுத்துகிறது. சென்னை மற்றும் இதர நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பல ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில நீண்டகாலப் பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்துள்ளன.

இந்தக் குடியிருப்புகளை முறையாகக் கணக்கெடுத்து, அவற்றை மறுகட்டுமானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   மறுகட்டுமானத்திற்குப் பின் இக்குடியிருப்புகள், புதுமையான, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் பழைய குடியிருப்புகளில் முன்னர் வாழ்ந்த குடும்பங்களுக்கும், இதே திட்டப் பகுதிகளின் அருகில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், 28 ஆயிரத்து 643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும். 

இதன் முதற்கட்டமாக, 2024-2025 ஆம் ஆண்டில், சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப்பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர் திட்டப்பகுதி மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள 6 ஆயிரத்து 746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஆயிரத்து 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

banner

Related Stories

Related Stories