தமிழ்நாடு

”மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது” : காதர் மொகிதீன் விமர்சனம்!

மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது, நாட்டு மக்களா நம்பப் போகிறார்கள்? என காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

”மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது” : காதர் மொகிதீன் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது, நாட்டு மக்களா நம்பப் போகிறார்கள்? என்று பிரதமரின் மத வெறுப்பு பேச்சுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மற்றும் பஞ்சுவாரா ஆகிய இரு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ள பாரதப் பிரதமர் மோடி அவர்களின் 'பேச்சு' பெரியதொரு 'ஏச்சாகவும், பொய் மூட்டையை அவிழ்த்துவிட்ட பிதற்றும் வாய் வீச்சாகவும் இருப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் சுட்டிக் காட்டி கடும் கண்டனக் கணைகளையும் வீசிவருகின்றன.

பிரதமர் பேசியது என்ன? ""காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்களிடம் உள்ள தங்கத்தையும், கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தையும் பறித்து, ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகள் பெறுபவர்களான முஸ்லிம்களுக்கும் பகிர்ந்து அளித்துவிடும்"" தினத்தந்தி 23.4.2024

இதுபற்றித் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெளியிட்டுள்ள அறிக்கை, நாட்டு மக்களின் கண்களைத் திறக்கும் அறிக்கை மட்டுமில்லை, நாட்டு மக்களின் இதயங்களைத் திறக்கும் பொன்னான அறிக்கையாகும்.

"மோடியின் இத்தகைய நச்சுப் பேச்சு இழிவானதும், மிகவும் வருத்தத்திற்குரியதும் ஆகும். மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார். வெறுப்பும், பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்திரவாதங்கள்"" இதுதான் தளபதியாரின் தமிழினத்தின் தன்மான அறிவிப்பு.

மார்க்கீய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீராதாம் யெச்சூரி கூறியது: ""மோடியின் பேச்சு கொடூரமானது. தேர்தல் கமிஷனின் மவுனம் இன்னும் கொடூரமானது. மோடியின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதுடன், வெறுப்பு பேச்சு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக உள்ளது".

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ""மோடியின் இந்த வெறுப்பு பேச்சு, அவரின் அறியாமையைப் புலப்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அவருக்குச் சொல்லிக் காட்ட வேண்டும்"" என்று கூறியிருக்கிறார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த பொருளாதார மேதையான பசிதம்பரம் அவர்கள், அடுக்கடுக்கான கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கிறார்.

"இந்திய மக்களின் சொத்துகளை, நிலங்களை, ஆபரணங்களை எல்லாம் பறித்து, முஸ்லிம்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி சொல்வதுபோல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எங்கே கூறி இருக்கிறோம்? மலைசாதி மக்களின் தங்கங்களையும் வெள்ளி ஆபரணங்களையும் அவர்களின் நிலங்களையும் பறித்து முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்படும் என்று பிரதமர் கூறியது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எந்த பக்கத்தில் இருக்கிறது? இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டிப் பேசும் பொய் பேச்சாக அல்லவா பிரதமரின் பேச்சு இருக்கிறது என்று சாடியிருக்கிறார்.

2006ஆம் ஆண்டில் டிசம்பர் 6ஆம் தேதி அன்று அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், ஆட்சியில், வெளிவந்த அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது"

"தேசத்தில் விவசாயம், நீர்ப் பங்கீடு, நீர்ப் பாதுகாப்பு போன்றவற்றுடன் எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மக்கள் மற்றுமுள்ள பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்திட வேண்டும். புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி, சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்கும், குறிப்பாக முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கு நாட்டின் வளர்ச்சியில் பங்கு அளித்திட வேண்டும்.

சிறுபான்மையினருக்குரிய வளர்ச்சிப் பங்கீட்டில் நாட்டின் பெரும்பான்மையாக உள்ளவர்கள் முஸ்லிம் சிறுபான்மைக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்"" என்ற இந்த வாசகத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் ஒதுக்கிவிட்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமே பகிர்ந்தளிக்க மன்மோகன் சிங் அரசு முயன்றுள்ளளது என்று பிரதமர் மோடி இப்போது குற்றம் சுமத்திப் பேசுவது எத்தகைய வடிகட்டின பொய் என்பதை நாடு அறிந்து கொண்டிருக்கிறது.

பிரதமர் பேச்சில், இந்திய முஸ்லிம்கள் "பிள்ளை குட்டிகளைப் பெற்றுத் தரும் எந்திரங்கள் என்பது போன்ற வெறுப்பைக் கக்கி இருக்கிறார். நாட்டில் எடுத்து வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தும், தேசம் முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும், முஸ்லிம்களின் மக்கள் தொகை, இந்துமக்களின் தொகையைப் போலவே இருக்கிறது என்பதையும், பொதுவாக, எல்லா மக்கள் மத்தியிலும் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கிறது என்றும், இன்னும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா முதியவர்களின் நாடு என்றாகிவிடும் என்ற அச்சமும் நிலவுகிறது என்றும் புள்ளிவிவரங்கள் தெளிவாக்கி வருகின்றன.

உண்மையை மறைத்து, பொய்பந்தல் போட்டு, தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர், உண்மையில் மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து வருகிறார் என்பதே இதற்கு விளக்கமாகிறது.

பாதரப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்துத்துவாதி என்பதிலோ, இந்தியாவை இந்துத்துவ அரசாக்க வேண்டும் என்று கூறிவரும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவர் என்பதிலோ யாருக்கும் புரியாமல் இருக்க முடியாது. பிரதமரின் ஒவ்வொரு நடவடிக்கையும், அவரின் சித்தாந்தத்திற்கு உரமூட்டுவதாகவே இருந்து வந்திருக்கிறது.

2001ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் சம்பவத்தைக் காரணம் காட்டி, வகுப்புக் கலவரம் அரசாங்கமே நடத்தியது என்பதும், 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும், 966க்கும் மேலான முஸ்லிம் கிராமங்களை இல்லாமல் ஆக்கினர் என்பதும், 600க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன என்பதும் உலகறிந்த உண்மையாகும்.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியிடத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி இது: ""கலவரத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து உங்களின் கருத்து...? மோடியின் பதில்: ""ஒடுகின்ற காரின் குறுக்கே குத்தே கா பச்சா, நாய்க்குட்டி ஒன்று குறுக்கே வந்துவிட்டால் என்ன செய்வது? இது, உலகப் பத்திரிகைகளில் எல்லாம் வந்தது.

”மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது” : காதர் மொகிதீன் விமர்சனம்!

மோடி அவர்கள் பிரதமர் பதவி ஏற்றார். முதன் முதலில், நாடாளுமன்றத்தில் பேசிய அவர் கூறியதாவது"" ""இந்தியாவின் ஆயிரமாண்டு 'குலாமி' அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்திருக்கிறோம் என்பதே ஆகும்.

எட்டு நூறு ஆண்டுகளின் முஸ்லிம் ஆட்சியையும், இரண்டு நூறு ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியைக் குறிப்பிட்டே மோடி அவ்வாறு கூறினார். இதன் தொடர்ச்சியாகவே, இப்போது, இந்திய முஸ்லிம்களை 'ஊடுருவுக்காரர்கள்' என்கிறார்.

மோடியின் இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் 2021 டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் உத்தரகாண்டு மாநிலம் ஹரித்துவார் நகரில், நடந்த மத மாநாட்டில், இந்தியாவில் உள்ள 25 கோடி முஸ்லிம்களையும் வெளியேற்றி, இந்தியாவை இந்துத்துவ நாடாக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். அந்தத் தீர்மானத்தைக் கண்டித்து பிரதமர் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இதைப் போன்றே, மணிப்பூரில் கிறிஸ்துவ மக்கள் கொல்லப்பட்ட போதும், பிரதமர் வாய் திறக்கவில்லை. இது அவரின் சித்தாந்தத்தின் வெளிப்பாடாகும்.

இல்லாததையும், பொல்லாததையும் நாகூசாமல் கூறி, நாட்டு மக்களை ஏமாற்றி, மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு, 18வது நாடாளுமன்றத் தேர்தலில் தேசத்து மக்கள் நல்லதொரு பாடம் கற்பிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 1827இல் மாபெரிய கவிஞர் மிர்ஜா அஸத்துல்லாஹ் கான் காலிப் அவர்களின் கவிதை வரிகள் இவை:

காசியில் (பெனாரஸில்) ஓர் அற்புதமான ஆன்மீகவாதியைக் கண்டேன். ஆறு மாதம் காலம், டெல்லியில் இருந்து புறப்பட்டு, கல்கத்தா வரை சென்று, இப்போது காசிக்கு வந்திருக்கிறேன். நாட்டில் நடக்கும் அலங்கோலங்களைக் கண்டு, நாட்டுக்கு அழிவு ஏற்பட்டு விடுமோ என்ற துயரத்தில் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். தேசத்திற்கு அழிவு எதுவும் வந்துவிடுமோ? என்ற வினா என் மனதில் அலைமோதிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கேட்ட அந்த ஆன்மிகப் பெரியவர் புன்னகை புரிந்தார்! அவர் சொன்னார்:

The Architect", he said, "is fond of this edifice Because of which there is color in life; He Would not like it to perish and fall." படைத்தவன், இந்தத் தேசத்தின் பிரியமானவனாக இருக்கிறான்! ஏனென்றால், இங்குள்ள வாழ்வு, எல்லா வண்ணங்களும் நிறைந்ததாக இருக்கிறது! இதை அழிக்கவோ, இதை வீழவோ, ஒருபோதும் அவன் ஒப்பமாட்டான்! ஆமாம்! அவனன்றி, ஓர் அணுவும் அசையாது! மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது, நாட்டு மக்களா நம்பப் போகிறார்கள்?. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories