தமிழ்நாடு

அதிமுக MLA வெற்றிக்கு எதிரான வழக்கு : மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு !

கிருஷ்ணகிரி அதிமுக MLA வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக MLA வெற்றிக்கு எதிரான வழக்கு : மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக சார்பில் செங்குட்டுவன் என்பவரும், அதிமுக சார்பில் அசோக்குமார் என்பவரும் போட்டியிட்டனர். தொடர்ந்து இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் அளித்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேட்புமனுவில் அசோக் குமார் தனது சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி தேர்தலுக்காக செலவிட்டுள்ளதாகவும், தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லையென்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதிமுக MLA வெற்றிக்கு எதிரான வழக்கு : மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு !

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்பு மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மீண்டும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று திமுக வேட்பாளர் செங்குட்டுவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் இதற்கென ஒரு பதிவாளர் நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல் தேர்தல் ஆணையமும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைகளை முடித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஏன் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories