தமிழ்நாடு

“இந்தியாவின் மின்வாகன உற்பத்தியின் தலைநகராக மாறும் தமிழ்நாடு”: VinFast ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

“இந்தியாவின் மின்வாகன உற்பத்தியின் தலைநகராக மாறும் தமிழ்நாடு”: VinFast ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.02.2024) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டை சேர்ந்த  வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் (VinFast Auto Limited)-ன் மின் வாகன உற்பத்தி (EV manufacturing) ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை, முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மின்வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்படவுள்ளது.

இத்திட்டம், தென் தமிழ்நாட்டில்  வாகன உற்பத்திக்கான   முதலாவது பெரிய முதலீடு என்பதும், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டன் மூலம், "இந்தியாவின் ஆட்டோ ஹப்" மற்றும் "இந்தியாவின் EV தலைநகரம்"  ஆக விளங்கும் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.  

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

“இந்தியாவின் மின்வாகன உற்பத்தியின் தலைநகராக மாறும் தமிழ்நாடு”: VinFast ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

அவற்றில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கடந்த மாதம்  7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் ’உலக முதலீட்டாளர்கள் மாநாடு’  வெற்றிகரமாக நடத்தப்பட்டது.  அம்மாநாட்டின்போது,  6,64,180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில், உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன், முன்னெப்போதும் இல்லாத சாதனையாக 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தமிழ்நாடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கினை அடைவதற்கான தொலைநோக்கு ஆவணத்தையும்   மாண்புமிகு முதலமைச்சர் வெளியிட்டார்.

மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில்  ஈடுபட்டுள்ள  வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட்,  7 வகையான மின் சீருந்துகளையும், 5 வகையான மின் ஸ்கூட்டர்களையும், 2 வகையான மின் பேருந்துகளையும் தயாரித்து வருகின்றது. இந்நிறுவனம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு2024-ன் போது, தமிழ்நாட்டில் மின் வாகன உற்பத்தியில் நீண்ட கால முதலீடாக 
2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 16,000 கோடி) முதலீடு செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 

அதன்படி, வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் (VinFast Auto India Private Ltd) மூலம் தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்- சில்லாநத்தம் தொழிற்பூங்காவில் 16,000 கோடி ரூபாய்  முதலீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று  அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார். 

இந்த ஆலை, ஆண்டொன்றுக்கு 1,50,000 வாகன உற்பத்தி திறன் கொண்டதாக அமையவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றிருப்பது, மாநிலத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு மிகவும் உகந்த சூழமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதற்கும், தொழில்முனைவோருக்கு தேவையான அனைத்து ஆதரவு சேவைகளையும் விரைவாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

banner

Related Stories

Related Stories