தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.02.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை:-
இன்றைய தினம் இந்த ஆய்வுக்கூட்டத்தின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நாம் எப்போதோ சந்திப்பவர்கள் அல்ல, அவ்வப்போது சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள்தான். சந்தித்து கோரிக்கை வைத்தால் தான் நிறைவேற்றப்படும் என்பதாக இல்லாமல், நீங்கள் என்ன வேண்டும் என்று சிந்தித்தால் அதனை செயல்படுத்தித் தரும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்துள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய எல்லார்க்கும் எல்லாம் வழங்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். எல்லார்க்கும் எல்லாம் என்ற வார்த்தைக்குள் பெரும்பான்மையும் உண்டு, சிறுபான்மையினரும் உண்டு. அனைவரும் உண்டு. திராவிட மாடல் என்பது எவரையும் யாரையும் பிரிக்காது, பிளவுபடுத்தாது, உயர்வு தாழ்வு கற்பிக்காது. இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில், பேட்டி அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஒருவர், 'பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்' என்று சொல்லி இருக்கிறார். இதைவிடச் சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது.
பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சியாகும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள். இந்த வரிசையில் சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக நமது அரசு உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதன் மூலமும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் இவ்வரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2007-ஆம் ஆண்டில் "சிறுபான்மையினர் நல இயக்குநரகம்" உருவாக்கியதே தலைவர் கலைஞரின் அரசு தான் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 2007-ஆம் ஆண்டு முதல், முதலமைச்சர் கலைஞர் அவர்களால் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவீதம் தனி இடஓதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி இட ஓதுக்கீடு வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சங்கங்களின் மூலம் ஆதரவற்ற, விதவைகள் மற்றும் வயதான முஸ்லிம்/கிறிஸ்தவ பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நாங்கள் இப்போது ஆட்சிக்கு வந்ததும், மேலும் கூடுதலாக 5 மாவட்டங்களில் சங்கங்களை உருவாக்கி தந்துள்ளோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் துவங்கப்பட்டு, தமிழ்நாட்டில் தற்போது 18 சிறுபான்மையினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் ரூபாய் 14 இலட்சம் செலவில் “செம்மொழி நூலகங்களும்” ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரூபாய் 5.90 இலட்சம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடுதிறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பிற்காக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டில் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பிற்காக வழங்கப்படும் மானியத் தொகை ரூபாய் 10 கோடியாக உயர்த்தப்பட்டு, இதன் மூலமாக 134 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் பயன்பெற்றுள்ளன.
"உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்" 2009-ஆம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் தான் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தில் இதுவரை மொத்தம் 15,848 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க கடந்த ஆண்டு ஆணையிட்டேன். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு 5.46 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நமது அரசு உருவானதும் முதன் முறையாக, 1000 இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில் 2500 தையல் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு ஆண்டு நிர்வாக மானியம் ரூபாய் 2.50 கோடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, 4 வக்ஃப் சரக அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கும்பொருட்டு, அவற்றை அளவை செய்வதற்காக ரூபாய் 2 கோடி அரசு நிதி ஒப்பளிப்பு செய்துள்ளது. வக்ஃப் சொத்துகளை அளவை செய்யும் பணி நடந்து வருகிறது. உலமா ஓய்வூதியதாரர் இறந்தபிறகு, அவரின் குடும்பத்தினருக்கு “குடும்ப ஓய்வூதியம்” வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது வரம்பை 40 ஆகவும், பணிக்காலத்தினை 10 ஆண்டாகத் தளர்த்தியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3987 பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர் அடக்கம் செய்யும் இடமான கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறுபான்மையினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதையும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை வழங்கும் 123 பணிகளுக்கு 658.44 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஆண்டில் 9217 சிறுபான்மை பயனாளிகளுக்கு 62 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற சாதனைகளை சிறுபான்மையின மக்களுக்கு செய்து கொடுத்துவரும் அரசுதான் நமது அரசு.
சில கோரிக்கைகளை நீங்கள் கடந்த காலங்களில் வைத்து வந்தீர்கள். இந்த கூட்டத்திலும் பேசியிருக்கிறீர்கள். அதனையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அது தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை இப்போது வெளியிட விரும்புகிறேன்.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் கோரிக்கை. மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும்.
மதசார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ், காலம் குறிப்பிடப்படாமல், நிரந்தர சான்றிதழாக வழங்க அரசாணை 02.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின அந்தஸ்து சான்றிதழை பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில், வலைதளம் (Web portal) உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கிணங்க, தமிழ்நாடு மின்ஆளுமை (TNeGA) மூலம் உருவாக்கப்பட்டு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 07.02.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி / நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை 30.1.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கையினை பரிசீலிக்கப்பட்டு, தகுதிகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று நீண்டநாள் சிறையிலிருந்த 10 சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன் விடுதலை கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும், வழிபாட்டு தலங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலும் இருக்கக்கூடிய இடர்பாடுகளை களைந்து, ஒரு நிலையான இயக்க நடைமுறை (SOP) வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவும் விரைவில் வெளியிடப்படும்.
பள்ளிக் கல்வித் துறையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த நான் ஆணையிட்டுள்ளேன்.
சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில் யு.ஜி.சி மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் நியமன அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வழங்கப்படும்.வக்ஃபு வாரியத்திற்கு போதுமான இடவசதிகளுடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். வக்ஃபு வாரியத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 27 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ஆவன செய்யப்படும் என்று ஏற்கனவே சட்டப்பேரவையில் 15.2.2024 அன்று அறிவித்துள்ளேன். அதுவும் விரைவில் கிடைக்கும்.
இவையுடன் சேர்த்து மேலும் சில அறிவிப்புகள் இங்கு வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள், இனிமேல் ரூபாய் 5 இலட்சம் வரை வழங்கப்படும். வக்ஃப் நிலங்களை கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக, 30 ஆண்டு நீண்ட கால குத்தகைக்கு வழங்க ஆய்வு செய்து, அரசு விரைவில் அனுமதி வழங்கும்.வக்ஃப் சொத்துக்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்ய சென்னையில் இருப்பதை போல மதுரையிலும் ஒரு தீர்ப்பாயம் அமைக்க உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும்.
சிறுபான்மையின மக்களுக்கு வழங்கிவந்த கல்வி உதவித் தொகையினை (Pre-Matric Scholarship) ஒன்றிய அரசு 2022-2023ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு நிறுத்திவிட்டது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.
இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏழை சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித் தொகையினை பெற இயலாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையினை, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 256 முஸ்லிம் மாணவியர்கள் பயன் பெறுவார்கள்.
உருது, அராபிக் மற்றும் இதர ஓரியண்டல் மொழித் தேர்வுகளுக்கான கட்டணத்தை சென்னைப் பல்கலைக்கழகம் ரூ.540/-லிருந்து ரூ.3000/-ஆக உயர்த்தியது அரசின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. இந்தக் கல்வியாண்டில் முந்தைய கட்டணத் தொகையான ரூ.540/- மட்டுமே மாணவர்களிடமிருந்து பெறப்படவேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்படும்.
மேலும், ஓரியண்டல் மொழித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள், ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, இந்த மாதம் 29-2-2024 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் அராபிக் பாடத்திட்டம் குறைவான மாணவர் சேர்க்கையால் இந்த ஆண்டு கைவிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்களுடைய கோரிக்கையை கருத்தில் கொண்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இப்பாடத்திட்டம் மீண்டும் தொலைதூரக் கல்வி மூலம் கொண்டு வரப்படும்.
முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்த இரண்டாம் மனைவி மற்றும் அவரது வாரிசுகளுக்கு கணவர் இறப்புக்கு பின்னால் வாரிசு சான்றிதழ் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். - இந்த அனைத்து உத்தரவுகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுபான்மை மக்களாகிய நீங்கள் அச்சமற்று வாழும் அமைதிச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அமைதியான சூழலை உருவாக்கித் தருவதே நல்லாட்சியின் இலக்கணம் ஆகும்.
அத்தகைய இலக்கணப்படி நடைபெறும் இந்த அரசுடன் உங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதனை பரிசீலித்து, படிப்படியாக நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணா தன்னுடன் யாரை இணைத்துக் கொண்டார் என்றால் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களைத்தான். சிறுபான்மையினர் அமைப்புகள் சேர்ந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவை நடத்தியபோது, 'என்னை உங்களில் இருந்து பிரித்துப் பார்த்து நன்றி சொல்லாதீர்கள், நான் என் கடமையைத் தான் செய்தேன்' என்றார் தலைவர் கலைஞர் அவர்கள். அத்தகைய எண்ணம் கொண்டு தான் நானும் செயல்பட்டு வருகிறேன்.
மொழியால் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒற்றுமையாக வாழ்ந்து, மாநிலத்தையும் வளர்த்து, இந்திய நாட்டையும் செழிக்க வைப்போம்.