தமிழ்நாடு

”வாருங்கள் கைகோத்து களத்தில் போராடுவோம்” : கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டிற்கு முதலமைச்சர் வாழ்த்து!

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

”வாருங்கள் கைகோத்து களத்தில் போராடுவோம்” :  கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டிற்கு முதலமைச்சர் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து மடலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டி அறிங்கி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியாக - இந்தியா கூட்டணியின் அங்கமாக திகழ்வதுடன், சமூகநீதி கொள்கை வழிப் பயணத்தில் துணை நிற்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடத்தும் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு தன்னுடைய இலக்கை அடைய என் வாழ்த்துகள்!

தோழமைக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினுடைய செயல்பாடுகளை நான் தொடர்ந்து உற்றுநோக்கி வருகிறேன். ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்ந்து நடத்துவது கடினமான சாதனையாகும். அந்த வகையில் தேர்தல் களத்தின் வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, கொங்கு மண்டலத்தினுடைய சமுதாயத்திற்கான முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணித்து வரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் - சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்.

தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தினுடைய வளர்ச்சிக்காக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும் பங்காற்றி வருகின்ற இயக்கம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. தற்போதைய சூழலில், இந்திய நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாத்து - பன்முகத் தன்மையைக் காப்பாற்றி, வலிமை மிக்க நாடாகவும், உரிமை நிறைந்த மாநிலங்களாகவும் மாற்றுவதற்கான கடமையாற்றி கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பயணத்தில் உறுதுணையாக இருந்து தொடர்வதை பாராட்டுகின்றேன்.

கொங்கு மண்டல வளர்ச்சிக்கான ஓர் இயக்கத்திற்கு விதை போட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நெருங்கிய நண்பர் கோவை செழியன் அவர்கள். கோவை செழியன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று கொங்கு மண்டலத்தில் பெருவாரியாக வசிக்கும் கொங்கு வேளாளர் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

இதனால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சிறப்பான வகையிலே முன்னேறி இருக்கிறார்கள் என்பதை நான் பெருமிதத்தோடு சொல்ல முடியும்.

”வாருங்கள் கைகோத்து களத்தில் போராடுவோம்” :  கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டிற்கு முதலமைச்சர் வாழ்த்து!

இந்தியாவிலேயே முதன்முதலாக உழவர்களுக்கான இலவச மின்சாரத்தை கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அறிவித்து செயல்படுத்தியபோது, அதில் அதிகம் பலன் அடைந்து, விளைச்சலைப் பெருக்கி, உணவுத் தேவையை நிறைவேற்றுவதில் உறுதுணையாக இருந்தது கொங்கு மண்டலம் என்பதை நாம் அறிவோம். முதன்முதலாக உழவர்கள் வாங்கிய கடனை தி.மு.க. அரசு தள்ளுபடி செய்தபோது அதிகப்படியான உழவர்கள் பலன் அடைந்ததும் கொங்கு மண்டலத்தில்தான். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொங்கு மண்டலம் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

உங்களின் பேராதரவுடன் 2021-இல் தி.மு.கழகம் ஆறாவது முறையாக ஆட்சியமைத்து, நான் முதலமைச்சரான பிறகு சென்னைக்கு அடுத்தபடியாக அதிகம் பயணித்தது கொங்கு மண்டலத்திற்குத்தான். கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கின்றோம், மேலும் பல கோரிக்கைகள் நிறைவேற இருக்கின்றன. கொங்கு மண்டலத்தினுடைய வளர்ச்சிக்காகத் திட்டங்களைத் தீட்டி கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவதில் திராவிட மாடல் அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிற இந்த நேரத்தில் நம் கவனத்தையும் இலக்கையும் திசைதிருப்ப பல்வேறு முயற்சிகள் நடக்கலாம். அதையெல்லாம் கடந்து அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாட்டைக் காப்பாற்றுவது நம்முடைய கடமை. அதற்கு அன்புச் சகோதரர் திரு.ஈஸ்வரன் தலைமையிலான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாடு துணை நிற்கட்டும். இந்த மாநாட்டினுடைய வெற்றி கொங்கு மண்டலத்தில் எழுச்சியை உண்டாக்கட்டும். வாருங்கள் கைகோத்து களத்தில் போராடுவோம்.

கொங்கு மண்டலத்தோடு சேர்த்து தமிழ்நாட்டையும் முன்னேற்றுவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என்ற இலக்கை அடைய போராட்டத்தைத் தொடங்குவோம். வெற்றி பெறுவோம்! வாழ்த்துகள்.

banner

Related Stories

Related Stories