தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அன்று ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிக்கு பெயர் போன ஊர்தான் மதுரை. மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது.
ஆனால் ஒன்றிய பாஜக அரசின் உத்தரவை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்தது. இதனால் தமிழ்நாட்டில் பெரிய மக்கள் புரட்சி வெடித்தது. தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகள் ஜல்லிக்கட்டு தடையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்த புரட்சி உலக தமிழ் அரங்கு வரை எதிரொலித்தது. உலகமே உற்று நோக்கிய ஒரு மக்கள் புரட்சியாக அமைந்த இந்த போராட்டமானது 1 வார காலமாக தொடர்ந்து நடைபெற்ற நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடை ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வரை ஆண்டுதோறும் இந்த போட்டியானது பிரம்மாண்ட முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது, ஒரு சிறிய மைதானத்தில் நடத்தப்படுவதாகவும், இதற்காக முறையான மைதானம் வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் அங்கே மக்கள் கூடி கண்டுகளிக்க ஏதுவான வசதி வேண்டும் என்றும் மக்கள் வலியுத்தினர்.
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு என்று தனி மைதானம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி மதுரை அலங்காநல்லூர் அருகே அமைந்திருக்கும் கீழக்கரையில் ரூ.62.78 செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வந்தது. இந்த அரங்கமானது ஒரே நேரத்தில் சுமார் 5000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
''கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவதல் அரங்கம்' என்று பெயர் கொண்ட பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து இன்று திறக்கப்பட்ட முதல்நாளே போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறும் வீரருக்கு முதல் பரிசாக மஹிந்திரா ஜீப் வழங்கப்படவுள்ளது. அதே போல சிறந்த காளையின் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.