தமிழ்நாடு

“மதவெறி என்பது ஒரு மயக்க பிஸ்கெட். அதனால்தான்...” : இராமர் கோவில் திறப்பு விழா குறித்து கி.வீரமணி !

ராமன் கோவிலை பிரதமர் திறப்பது குறித்து சங்கராச்சாரியார் எழுப்பிய கேள்விக்குப் பதில் என்ன? பிஜேபி கூட்டணியின் மதவாத அரசியலை இந்தியா கூட்டணி அம்பலப்படுத்த வேண்டும் என கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

“மதவெறி என்பது ஒரு மயக்க பிஸ்கெட். அதனால்தான்...” : இராமர் கோவில் திறப்பு விழா குறித்து கி.வீரமணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இராமன் கோவில் திறப்பு என்பது கொடுத்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றாததை மூடி மறைக்க மேற்கொள்ளும் தந்திர வித்தை. ‘இந்தியா’ கூட்டணி இதனை மக்களிடம் எடுத்து வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

"அயோத்தியில் கட்டி முடிக்கப்படாது அரை குறை நிலையில் உள்ள இராமன் கோவிலில், அவசர அவசரமாக இம்மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் இராமன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்ற நிலையில், ‘‘நாங்கள் அங்கே சென்று அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது’’ என்று முதலில் பூரி சங்கராச்சாரியாரும், பிறகு மற்ற மூன்று சங்கராச்சாரிகளும் ‘‘இது ஸநாதன தர்மத்திற்குப் புறம்பானது’’ என்ற கூறி, அறிவிப்புச் செய்திருப்பதற்குப் பா.ஜ.க.வின் பதில் என்ன தெரியுமா?

இராமன் கோவிலை பிரதமர் மோடி திறக்க சங்கராச்சாரிகள் எதிர்ப்பு :

‘‘அவர்கள் வைஷ்ணவர்கள் அல்ல; ஸ்மார்த்தர்கள்’’ என்று சொல்வதுதானா? ‘‘ஹிந்துக்களே, ஒன்று சேருங்கள்’’ என்று குரல் கொடுத்து, ‘ஹிந்துராஷ்டிர அமைப்பு’ என்று கூறி, ‘‘நாட்டில் உள்ள அனைவரும் ஹிந்துக்களே’’ என்ற பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களது பேச்சுக்கு இது நேர்முரணாக இல்லையா? பா.ஜ.க. சங்கராச்சாரிகள் - அது அவர்களது துறை என்பது அனைவருக்கும் தெரியும்; கட்சியின் பதில் ஒரு வெற்றுச் சமாதானமாக இருக்கிறது என்பதன்மூலம், உலகம் ஒன்றைப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது!

இது அசல் சந்தர்ப்பவாதம்தானே! :

பிரதமரின் பா.ஜ.க. உண்மையை மக்களுக்குப் புரிய வைத்துள்ளது. அப்படியானால், பிரதமர், ஆதிசங்கரருக்கு சிலை திறந்து வணங்கினாரே, அப்போது இந்த வாதம் வரவில்லையே, ஏன்? இந்த இராமன் - கடவுள் இராமன் - பக்திக்குப் பயன்படுத்தப்படுவதை நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் சொன்ன மக்கள் நல சம்பந்தப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாததனால் ஏற்பட்டுள்ள வாக்காளர்களின் அதிருப்தியை இந்தப் ‘பக்தி’, கோவில் - போதைமூலம் மறைத்துவிடும் முயற்சி அல்லாமல் வேறு என்ன? தேர்தல் வித்தைதானே!

“மதவெறி என்பது ஒரு மயக்க பிஸ்கெட். அதனால்தான்...” : இராமர் கோவில் திறப்பு விழா குறித்து கி.வீரமணி !

மதவெறி என்பது ஒரு மயக்க பிஸ்கெட்! :

இராமனை தேர்தல் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தி, பக்தி மயக்க பிஸ்கெட்டுகளைத் தந்து, மக்களின் மதவெறியை மூலதனமாக்கி, வாக்கு சேகரிக்கும் ஒரு வித்தை என்பதை நாடு உணரத் தலைப்பட்டு இருக்கிறது. அதனால்தான் இந்த வித்தைக்கு தாங்களும், காட்சிப் பொருளாகவோ, உடன்படுவோராகவோ இருக்கமாட்டோம் என்று அவர்கள் அனுப்பிய அழைப்பைப் புறக்கணித்துள்ளனர் - காங்கிரஸ் தலைவர்களும், கம்யூனிஸ்டுகளும், அகிலேஷ் கட்சியும், மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு கட்சியும், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும்!

வாக்குறுதிகளை மறைக்க பக்திப் போர்வை! :

‘பக்தி’ என்பது தனி மனிதனைப் பொறுத்தது; அரசு, அமைப்பு, தேர்தல் என்பது ஜனநாயகத்தின், பொதுமக்களின் உரிமை என்பதை நன்கு புலப்படுத்தியுள்ளனர்.

முன்பு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள்:

1. இரண்டு கோடி பேருக்கு ஆண்டுதோறும் வேலை தருகிறோம்.

2. விலைவாசியை இறக்கிக் காட்டுவோம்.

3. கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து தலைக்கு ரூ.15 லட்சம் போடுவோம்.

4. விவசாயிகளின் வாழ்வை இரண்டு மடங்காகப் பெருக்குவோம்

5. அவர்களது விளைபொருளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) நிர்ணயிப்போம்.

- போன்ற பலவற்றை காற்றில் பறக்கவிட்டதை மக்கள் கேள்வியாய்க் கேட்டு, பிரச்சார அம்புகள் கிளம்புவதைத் தடுத்து, திசை திருப்பவே - பக்தியை, மதத்தை, இராமர் கோவில் திறப்பை - பிரதமர் மோடி அவர்களே சொல்லும் ஸநாதனத்திற்கு விரோதமாக நடந்துகொண்டு, ஒன்றிய அரசு, உ.பி. அரசு இயந்திரத்தை முழு மூச்சாகப் பயன்படுத்திடும் நிலை. உறுதி எடுத்துக்கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை - Secula - மூலக் கொள்கையை காலில் போட்டு மிதிப்பது அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?இதை பூரி சங்கராச்சாரியாரே நேற்று (13.1.2024) உ.பி.யில் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளது மிகவும் சரியான உண்மையாகும்.

“மதவெறி என்பது ஒரு மயக்க பிஸ்கெட். அதனால்தான்...” : இராமர் கோவில் திறப்பு விழா குறித்து கி.வீரமணி !

தேர்தலில் மதத்தைப் பயன்படுத்துவது சட்ட விரோதம் - நீதிமன்றம் தீர்ப்பு! :

இது தேர்தல் விதிமுறைகளுக்கே கூட முற்றிலும் முரணானது; அப்படி ‘‘தேர்தலில் மதத்தைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால், அது தண்டனைக்குரியது’’ என்று நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்புப்பற்றி கூட கவலைப்படாமல், ‘தானடித்த மூப்பாக’ நடந்துகொள்வது எவ்வகையில் நியாயம்? 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற தானே மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளரின் தேர்தல் செல்லாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் பகிரங்கமாக அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்திற்கே நேர் முரணானது. இதற்கு அரசு இயந்திரம் கூச்சநாச்சமின்றி செயல்படுத்தப்படுவது எவ்வகையில் நியாயம்? அனைத்து மதம், உணர்வாளர்களின் ஆட்சியாக, ஜனநாயகம் நடைபெற வேண்டியதற்குப் பதிலாக, இப்படி திசை திருப்பல் ஏற்கத்தக்கதா?

இந்தியக் கூட்டணியினர் கவனத்திற்கு...

முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத இராமர் கோவிலை - பிரதமரை முன்னிறுத்திச் செய்து - ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஒவ்வொரு ‘‘வித்தை’’ என்ற அடிப்படையில்தான் இது நிகழவிருக்கிறது. பிறகு உறுதிமொழிகள் வெறும் ‘ஜூம்லா’தான்! ‘இந்தியா’ கூட்டணியினர் கொஞ்சம்கூட தயங்காமல், இதனை மக்களிடையே அம்பலப்படுத்தத் தயக்கம் காட்டக்கூடாது. மக்களின் பசி தீர்க்க, வறுமையைப் போக்க, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க செயல்படவேண்டிய ஒன்றிய ஆட்சி - இப்படி மத வியாபாரத்தில் இறங்கி வாக்கு வேட்டைக்கு ஆயத்தமாவது நியாயமா?"

banner

Related Stories

Related Stories