தமிழ்நாடு

“கு.க.செல்வம் மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“கு.க.செல்வம் மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னையின் ஆயிரம் விளக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் கு.க.செல்வம். ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த இவர், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 1997-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அப்போது கலைஞர் உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கி பழகினார். தொடர்ந்து திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில்தான் 2016-ம் ஆண்டு திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார். இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் திடீரென இணைந்த கு.க.செல்வத்திற்கு பாஜக மதிப்பு கொடுக்கவில்லை. இதனால் 2022-ம் ஆண்டு திமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.

மீண்டும் திமுகவில் இணைந்த அவர் மீண்டும் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமிக்கபட்ட நிலையில், அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“கு.க.செல்வம் மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு :

“வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது என்று எண்ணும்போது நெஞ்சம் விம்முகிறது. அவரது பேச்சுதான் பலருக்கும் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்குமே தவிர, அவரது வெள்ளை உள்ளம் பழகும் எவர்க்கும் கற்கண்டாய் இனிக்கும். இனி அந்தக் கற்கண்டைக் கழகத் தோழர்கள் காண இயலாது எனும் எண்ணம் வருத்துகிறது.

சென்னை மேற்குப் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரர், தென்சென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர் எனக் கழகத்துக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பிள்ளை மனம் கொண்ட கழக வீரர் அவர்!

“கு.க.செல்வம் மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

எம்.ஜி.ஆர் அவர்களது மறைவுக்குப் பிறகு கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, தலைவர் கலைஞரின் அன்புத் தம்பிகளில் ஒருவராக விளங்கினார். அதுநாள் முதலே என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பைச் செலுத்தி வந்தவர் கு.க.செல்வம் அவர்கள். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றினார். நான் வெளியூர் செல்லும்போது பலசமயம் என்னுடன் அவரும் வருவார்.

அண்மையில் சிறிது காலம் தடம் மாறிச் சென்றாலும், உடனே மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதுதான் கு.க.செல்வம். அவர் சென்றபோதே திரும்ப வந்துவிடுவார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

கு.க.செல்வம் அவர்களின் மறைவு என்பது அவரது குடும்பத்துக்கும் கழகத்துக்கும் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். என்னை நானே தேற்றிக் கொண்டு, அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

banner

Related Stories

Related Stories