தமிழ்நாடு

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப் பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம் என வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் இன்று (28.12.2023)  பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த  “வைக்கம் போராட்டம்”  நூற்றாண்டு சிறப்பு விழா, எதிர்கட்சி முன்னாள் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டது. 

இவ்விழாவிற்காக நேற்று வருகை தந்திருந்த கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர்கள்.

அதுபோது வைக்கம் போராட்டத்தின் “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலர்” “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” ஆகிய நூல்களை வெளியிட்டனர். இந்நிகழ்வில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு :- “எனது உரையைத் தொடங்குவதற்கு முன்னால், முக்கியமான ஒரு செய்தியை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அண்மையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெய்த கனமழையால அங்கே இருக்கக் கூடிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், சகோதரப் பாச உணர்வோடு, ‘அன்போடு கேரளம்’ என்கிற பெயரில், தமிழ்நாட்டுக்கு நிவாரண உதவிகளையும் அதிகாரிகளையும் அனுப்பி வைத்த கேரள மக்களுக்கும், கேரள முதலமைச்சர் சகாவு பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, தமிழ்நாடு முதலமைச்சராக என் நெஞ்சார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

''வைக்கத்து வீரர் என்று யாரைச் சொன்னோம்?

'வை கத்தி! தீண்டாமைக் கழுத்தில்’ என்று

வரிப்புலியாய்க் களம் சென்று வாகைசூடி

வையத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர்!''

- என்று தமிழினத் தலைவர் கலைஞர் னது கனல் தெறிக்கும் வரிகளால் எழுதினார்.

“ஈ.வெ.இராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்” - என்று அறிவித்துக் கொண்டு 95 வயது வரை, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களின் சமூகநீதியை நிலைநிறுத்தவும் தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதைப் போராட்டங்கள் பற்பல.  அவற்றில் மிக முக்கியமானது வைக்கம் போராட்டம் ஆகும். 

அத்தகைய வைக்கம் வீரர் - பகுத்தறிவுப் பகவலன் - தந்தை பெரியாரின் வெற்றிப் போராட்டங்களில் ஒன்றான வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இவ்விழாவில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள கேரள மாநில முதலமைச்சர் - மரியாதைக்குரிய காம்ரேட் பினராயி விஜயன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். 

வைக்கம் போராட்டம் என்பது கேரள சீர்திருத்தவாதிகளும் – தமிழ்நாட்டுச் சீர்திருத்தவாதிகளும் இணைந்து நடத்திய போராட்டம் என்பதால் இரண்டு மாநில அரசும் சேர்ந்து நூற்றாண்டு விழாவை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் நூற்றாண்டு தொடக்க விழாவைக் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியன்று கேரளாவில் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் நடத்தினார்கள். அதில் நான் கலந்து கொண்டேன். இன்றைய தினம் தமிழ்நாடு அரசு நடத்துகிறது. கேரள முதலமைச்சர் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். இணைந்து போராடினால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாகவும் வைக்கம் போராட்டம் திகழ்கிறது.

கேரளத்தில் சமூகப் புரட்சி இயக்கம் என்பது நாராயணகுரு, டாக்டர் பல்ப்பு பத்மநாபன், குமாரன் ஆசான், அய்யன்காளி, டி.கே.மாதவன் - ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது ஆகும்.

தமிழ்நாட்டு புரட்சி இயக்கமானது இராமலிங்க வள்ளலார், வைகுண்டசாமி, அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், பண்டித அயோத்திதாசர், டி.எம்.நாயர், தந்தை பெரியார் ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது ஆகும்.

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இதில் கேரளத்தைச் சேர்ந்த டி.கே.மாதவன் அவர்களும் - தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை பெரியாரும் இணைந்து நடத்திய வெற்றிப் போராட்டம் தான் வைக்கம் போராட்டம் ஆகும். 1924-25ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின், வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்தது.  1924-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அப்போராட்டம். 

அந்தப் போராட்டம் தொடங்கிய சில நாள்களிலேயே, அதே பகுதியைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் இன்றிப் போராட்டம் தவித்தது. இச்சூழலில் கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த தந்தை பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பலநாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தார். வெகுமக்களிடம் அந்தப் போராட்டம் குறித்து பரப்புரை செய்து, போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

போராட்டக்காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார். முதல்முறை அருவிக்குத்தி என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில் ஒரு மாதகாலம் சிறை தண்டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஒருமாத காலம் திருவனந்தபுரம் சிறையில் கழித்தார்.

வைக்கம் போராட்டம் நடந்தது மொத்தம் 603 நாட்கள். இதில் 141 நாட்கள் தந்தை பெரியார் பங்கெடுத்தார்கள். அதில் 74 நாட்கள் சிறையில் இருந்தார்கள். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து 7 முறை கேரளத்துக்குச் சென்றுள்ளார் தந்தை பெரியார். 

தந்தை பெரியார் அவர்களுக்கு என்ன சிறப்பு என்றால் - இந்த போராட்டத்தில் கைதான மற்ற தலைவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள். ஆனால் பெரியாரை மிகமோசமாக நடத்தினார்கள். கையிலும் காலிலும் விலங்கு போட்டு - கழுத்தில் மரப்பலகையை மாட்டி - அடைத்து வைத்திருந்தார்கள். இதே போராட்டத்தில் கைதாகிச் சிறையில் இருந்த தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவ மேனன் 'பந்தனத்தில் நின்னு' என்ற தலைப்பில் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

பெரியார்
பெரியார்

அதன் சில வரிகளை மட்டும் நான் படிக்கிறேன்... ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் - ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனாக இருந்தவரும் - ஒரு பெரும் பணக்காரரும் - உத்தம தேசாபிமானியுமான - ஈ.வெ.ராமசாமி காலில் சங்கிலி மாட்டப்பட்டு இருந்தது. கைதிகளது தொப்பி மாட்டப்பட்டு இருந்தது. முழங்கால் வரையில் வேட்டி அணிந்திருந்தார். கழுத்தில் மரக்கட்டையை மாட்டி கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் வைக்கப்பட்டுள்ளார். கேரளத்தின் தீண்டாமைச் சாதிக்காரர்களது சுதந்திரத்துக்காகத் தமிழ்நாட்டின் மேல்குலத்தைச் சேர்ந்த இந்து ஒருவர் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது எங்களுக்கு புத்துயிர் தந்தது" - என்று கே.பி.கேசவ மேனன் எழுதி இருக்கிறார்கள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே ஈரோடு திரும்பாமல் வைக்கம் சென்று மீண்டும் போராடினார் பெரியார். 

போராட்டக்காரர்களுக்கும் மன்னருக்குமான பேச்சுவார்த்தையை நடத்திய அண்ணல் காந்தியடிகள், தந்தை பெரியாரிடம் கலந்துரையாடல் நடத்திய பிறகே திருவிதாங்கூர் ராணியைச் சென்று சந்தித்தார்.

'சாலைக்குள் அனுமதிக்கிறோம், கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது' என்று ராணி அப்போது சொன்னார்கள். இதனைப் பெரியார் அவர்களிடம் சொல்லி, 'கோவில் நுழைவை சிறிது காலத்துக்கு நீங்கள் ஒத்தி வைக்க வேண்டும்' என்று காந்தி அனுமதி பெற்றார் என்பதும் வரலாறு ஆகும். "திருவிதாங்கூர் கவர்ன்மெண்டார் குரூர் நீலகண்டன் நம்பூதிரியைச் சிறையினின்று விடுவித்து விட்டார்கள் என்பதையும் ஈ.வி.ராமசாமி நாயக்கருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவை வாபீஸ் வாங்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதையும் கேட்க வாசகர்கள் சந்தோஷமடைவார்கள்" என்றும் யங் இந்தியா பத்திரிக்கையில் காந்தி அவர்களே எழுதினார்கள் என்றால் பெரியாரின் பங்களிப்பு எவ்வளவு இருந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

''Mr. Ramasami Naicker arrived on that day from Erode to take charge of the campaign" என்றும்; ''One Ramaswami Naicker of Erode is now leading the movement" என்றும் போலீஸ் ஆவணங்களில் பெரியார் பெயர் இருக்கிறது. பெரியார் தலைமை தாங்கினார் என்பதை காவல்துறை ஆவணங்களே சொல்கின்றன.

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23-ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29-ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. இதில் பெரியார் வீட்டுப் பெண்கள் அளித்த பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும். தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்றபோது அவருடன் அவரது மனைவி நாகம்மையாரும், பெரியாரின் சகோதரி கண்ணம்மாவும், பெரியாரின் உறவினர்களான லட்சுமியம்மாள், மாரக்காயம்மாளும் சென்றிருக்கிறார்கள். இவர்கள்தான் கேரளப் பெண்களையும் போராட்டத்துக்குள் கொண்டு வந்தார்கள். போராட்டத்துக்கான நிதி திரட்டுவதற்காக ராட்டை நூற்றார்கள் இவர்கள்.

வைக்கம் போராட்டத்தில் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாகப் பெரியார் சிறைப்பட்டிருந்த சமயம் நாகம்மையார் தலைமையிலான ஆறு பெண்கள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். பெரியார் சிறை வைக்கப்பட்டு இருப்பதால் மற்ற தலைவர்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று நாகம்மையார் அறிக்கை வெளியிட்டார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களை, வைக்கம் கோயில் சாலையை நோக்கி நாகம்மையார் அழைத்துச் சென்றபோது காவல்துறையால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். ஒவ்வொருவரையும் என்ன ஜாதி என்று கேட்டு - அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை மட்டும் உள்ளே விடாமல் தடுத்துள்ளது காவல்துறை. அங்கேயே தர்ணா செய்துள்ளார் நாகம்மையார். அவரது போராட்டத்தைக் கேரள பத்திரிக்கைகள் விரிவாக எழுதி உள்ளன.

மகத் போராட்டத்தைத் தொடங்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தனக்கு ஊக்கமளித்த போராட்டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார். அதன்பிறகுதான் தமிழ்நாட்டில் ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றன. அனைவரும் கோயிலுக்குள் நுழையலாம், அதனை யாரும் தடுக்கக் கூடாது என்ற சட்டம் அதன் பிறகுதான் வந்தது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இன்று வரையில் வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவைப் போற்றவும் - சமூகநீதிக் கருத்துக்களைத் தொடர்ந்து வலியுறுத்தவும் “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா” நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

* கடந்த ஏப்ரல் 1-ஆம் நாள் கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினேன். அன்றைய தினம் வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தினோம்.

* தமிழ்நாட்டில் மிக முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான   பழ. அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாளம், கன்னட மொழி பெயர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

* கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்க 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு - மாபெரும் நினைவகம் அமைக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மேற்பார்வையில் அது கட்டப்பட்டு வருகிறது.  இன்னும் ஒரு மாதத்தில் அப்பணிகள் முடிவடையும். அதனைத் திறந்து வைப்பதற்கு நானும் கேரளம் செல்ல இருக்கிறேன். 

*தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன் முதலாகச் சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்குத்தி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நான் அறிவித்து இருந்தேன். மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கேரளா சென்று அந்த இடத்தை பார்வையிட்டு வந்துள்ளார்கள். அதனை முறைப்படி கேரள அரசிடம் இருந்து பெற்றுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.

* வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்றுத் தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ இதழ் மூலம் கொண்டு வரப்படும் என்று அப்போது அறிவித்து இருந்தேன். அத்தகைய சிறப்பு மலர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த மலருக்கு என்ன சிறப்பு என்றால் இது மூன்று மொழிக் கட்டுரைகளைத் தாங்கியதாக அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பெரியாரை வைக்கம் வீரர் என்று சொல்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கப் பார்க்கிறார்கள். கேரள வரலாற்று ஆவணங்களிலும் - வைக்கம் குறித்து ஆய்வு செய்த ஆங்கில வரலாற்றாசிரியர்களும் பெரியாரின் பங்களிப்பை மறைக்காமல் - மறுக்காமல் பதிவு செய்துள்ளார்கள். அதன் முழுத் தொகுப்பாக இந்த மலர் அமைந்துள்ளது. 

தந்தை பெரியார், டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், கேளப்பன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, மன்னத்து பத்மநாபன், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் பிள்ளை, காந்திராமன், தாணுமாலையப் பெருமாள் போன்ற தியாகிகளை இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் நான் அறிமுகம் செய்தாக வேண்டும். அவர்களது உணர்வை மாநிலத்து மக்கள் பெற்றாக வேண்டும். எத்தகைய கசப்பான காலத்தை பல்வேறு போராட்டங்களின் மூலமாக நாம் கடந்து வந்துள்ளோம் என்பதை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு சீர்திருத்த இயக்கம் - அரசியல் பரிணாமம் பெற்று - ஆட்சியைப் பிடித்து - பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த பெருமை ஆகும். இதனைத் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் - '' ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை." என்று குறிப்பிட்டார்கள். பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல; ஒரு சகாப்தம் ஒரு காலகட்டம், ஒரு திருப்பம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925 நடந்தபோது அதில் கலந்து கொள்ள பெரியாருக்கும் நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. தலைமை வகிக்கச் சொன்னார்கள். தலைமை வகிக்க மறுத்து வாழ்த்திப் பேசினார் பெரியார். '' உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையை பிடித்து அழைத்துச் செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்துக்கு ஏற்பட்ட மகிமை. பலாத்காரப் போராட்டம் நடத்தியிருந்தால் கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம்' என்று பேசினார் பெரியார். இத்தகைய வெற்றியின் 100 ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அன்று பெரியாரையும் வைக்கம் போராட்ட வீரர்களையும் கைது செய்தது திருவிதாங்கூர் அரசு. ஆனால் இன்று வைக்கம் நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசும் - கேரள மாநில அரசும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இரண்டு மாநில முதலமைச்சர்கள் இங்கே இருந்து கொண்டாடுகிறோம். இதுதான் வைக்கம் உரிமைப் போராட்டத்தின் வெற்றியாகும். 100 ஆண்டுகளில் கிடைத்த மாபெரும் மாற்றம் இது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசும் - கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் - கொள்கை சார்ந்த அரசாக இருப்பதால் இதனை நாம் கொண்டாடுகிறோம்.

பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் போது வைக்கம் நூற்றாண்டு விழா வருவது பொருத்தமானது. சாதாரண ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக வளரக் காரணமான போராட்டக் களம் அது. அத்தகைய சமூக சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களாக இன்றைய இளைய சமுதாயம் திகழ, இது போன்ற கடந்த கால வரலாறுகளை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு இது போன்ற விழாக்கள் பயன்பட வேண்டும்.

100 ஆண்டுகளுக்கு முன் நாம் எப்படி இருந்தோம் - இப்போது எப்படி இருக்கிறோம் என்ற கடந்த காலத்தை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த மாற்றத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு சமூகநீதித் தத்துவத்துக்கு உண்டு. கல்வியில் - வேலை வாய்ப்பில் - சமூகப் பங்களிப்பில் நாம் சமூக நீதியை முழுமையாக அடைந்துவிட்டோம். நாம் அரசியல் ரீதியாக தடுக்கப்பட்ட இடங்களில் புகுந்து வெற்றி பெற்று அதிகார நிறுவனங்களைக் கைப்பற்றி விட்டோம். பொருளாதார சுதந்திரம் என்பதும் பல்வேறு வகைகளில் கிடைத்து வருகிறது. ஆனால் சமூகத்தில் ஒரு சில இடங்களில் முழுமையான சமூகநீதி கிடைத்து விட்டதா என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும்.

“வைக்கம் போராட்டத்தில் பெரியார்” : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைச் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைவரும் அனைத்து இடங்களையும் சமமாக நடத்தப்படுவதைச் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவற்றையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டும். சமூக சீர்திருத்தமாக இருந்தாலும் - புரட்சியாக இருந்தாலும் சாதாரணமாகக் கிடைத்து விடாது. தானாகக் கிடைத்து விடாது. ''தானாய் எல்லாம் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா' என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாட்டு ஆகும். நாம்தான் மாற்றியாக வேண்டும். ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையை ஒடுக்கப்பட்டோரே போராடிப் பெற்றாக வேண்டும். பிரச்சாரத்தின் மூலமாக மன மாற்றம் செய்வதும் - போராட்டங்களின் மூலமாக வலியுறுத்துவதும் - சட்டங்களின் மூலமாகக் கட்டாயப்படுத்துவதுமான மும்முனைத் தாக்குதலை நடத்தியாக வேண்டும்.

தீண்டாமைக்கு எதிராக - சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக - உயர்வு தாழ்வுச் சிந்தனைக்கு எதிராக - நாம் போராடியாக வேண்டும். அது மட்டுமல்ல ஆண் - பெண் பாகுபாடு களையப்பட வேண்டும். ஆணாதிக்கச் சிந்தனையும் - பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் தடுக்கப்பட வேண்டும். மார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் போன்ற முற்போக்குச் சிந்தனைகள் அனைத்துமே - அனைத்து ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்டவைதான்.

இத்தகைய சமூக சீர்திருத்த - புரட்சியாளர்கள் காட்டிய வழியில் சமூகநீதி - சமத்துவ - சமதர்ம சமுதாயம் அமைக்க நாம் நமது போராட்டப் பயணத்தை இறுதி இலக்கை எட்டும் வரை தொடர்வோம் என்ற உறுதிமொழியை வைக்கம் நூற்றாண்டு விழாவில் எடுத்துக் கொள்வோம்.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது, தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் - 'பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்டார், நாம் தொடர்வோம் ' என்று குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சுற்றுப் பயணத்தை நாம் அனைவரும் தொடர்வோம், தொடர்வோம்!

Related Stories

Related Stories