தமிழ்நாடு

"தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத்தை முழுமையாக விடுவித்திட வேண்டும்" - ஒன்றிய அரசுக்கு துரைவைகோ கோரிக்கை !

பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என மதிமுக செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத்தை முழுமையாக விடுவித்திட வேண்டும்"  - ஒன்றிய அரசுக்கு துரைவைகோ கோரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

​தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் தமிழகத்தை உலுக்கிய கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் அதிக அளவு பாதிப்பை சந்தித்ததுள்ளது.

இந்த சூழலில் வெள்ள பாதிப்புக்காக பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி கோரியிருந்தார். தொடர்ந்து ஒன்றிய அரசு வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இன்று ஒன்றிய அரசின் குழுவும் ,மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறது.

"தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத்தை முழுமையாக விடுவித்திட வேண்டும்"  - ஒன்றிய அரசுக்கு துரைவைகோ கோரிக்கை !

இந்த நிலையில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என மதிமுக செயலாளர் துரை வைகோ அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

"வங்கக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமழையால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் உள்ளிட்ட இதர சில மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள், பெருமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

நான்கு தென் மாவட்டங்களிலும்சில உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புற பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை முழுமையாகவோ, பகுதியாகவோ இழந்துள்ளனர். கிராமப்புறங்களில் பல நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதம் அடைந்துள்ளன.

விவசாயிகளின் நெல் வயல்கள் நீரில் மூழ்கி, முழுமையாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மக்காசோளம், உளுந்து, பாசி போன்ற பணப்பயிர்கள் சாய்ந்தும் நீரில் மூழ்கியும், அறுவடை செய்ய முடியாத அளவுக்கு முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் தாங்கமுடியாத வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

"தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத்தை முழுமையாக விடுவித்திட வேண்டும்"  - ஒன்றிய அரசுக்கு துரைவைகோ கோரிக்கை !

கிராம சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் காட்டாற்று வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளின் பல்வேறு பயிறு வகைகள், காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் நட்டம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலையில், அவர்கள் தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ள நிலையிலும், தங்களின் படகுகளைக் கொண்டு வந்து மக்களை காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகம் முழுமையாக முடங்கியுள்ளது.

விவசாயிகள், விவசாயக் கூலி வேலை செய்யும் மக்கள் வேலை இழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு அறிக்கைகளாலும், கணிக்க முடியாத பெரும் மழை கொட்டும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பில், பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களை, இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், அரசுத் துறையினர், அரசியல் கட்சிகள், தன்னார்வல அமைப்பினர் முழு வீச்சில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்திய ஒன்றியப் பிரதமர் அவர்களை 19.12.2023 அன்று நேரில் சந்தித்து பெருவெள்ள சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளார். இந்திய ஒன்றிய அரசு உடனடியாக மத்திய ஆய்வு குழுவினை அனுப்பி, வரலாறு காணாத வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள, தென் மாவட்டங்களின் சேத நிலவரத்தை முழுமையாக கணக்கிட்டு, தமிழ்நாடு அரசு கூறும் நிவாரணத்தை முழுமையாக விடுவித்திட வேண்டும்.

மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததற்கு விவசாயிகளுக்கு இழப்பீடும், காப்பீட்டுத் தொகையும், வீடு இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டி தருவதற்கும், சேதமடைந்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்குவதற்கும், சேதமடைந்த சாலைகள்,குளங்களை முழுமையாக சீரமைப்பதற்கும், முன்னுரிமை வழங்கி நிவாரணம் வழங்கிட முன் வருமாறு, இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories