தமிழ்நாடு

ஜனநாயக மார்பின்மீது வீசப்பட்ட ‘வெடிகுண்டு’ : கி.வீரமணி ஆவேச அறிக்கை!

நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைக்குக் காரணம் பாதுகாப்புக் குறைபாடே என தி.க தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக மார்பின்மீது வீசப்பட்ட ‘வெடிகுண்டு’ : கி.வீரமணி ஆவேச அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேற்றுமுன்தினம் (13.12.2023) மக்களவை நடந்துகொண்டிருந்தபோதே பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பியை வீசியதற்குக் காரணம் பாதுகாப்புக் குறைபாடே! இதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்லவேண்டிய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அந்தக் கடமையைச் செய்யாமல், கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவை நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

டிசம்பர் 6 என்று சொன்னால் நாடே பரபரப்பாக இருக்கும். எல்லா இடங்களிலும் சோதனைகளைத் துல்லியமாக மேற்கொள்ளும் காவல்துறை! காரணம், டிசம்பர் 6 என்னும் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து - 450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான அயோத்தியில் மசூதியை பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதல்படி சங் பரிவார்களும் முக்கியமாக விசுவ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். காவிகளும் முன்னின்று ஆக்ரோசமாக இடித்துத் தரைமட்டமாக்கினர் - இந்திய வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம்; இந்தக் காரணத்தால் டிசம்பர் 6 இல் அசம்பாவிதம் -வன்முறை வெடிக்க வாய்ப்பு உண்டு என்ற தொலைநோக்கோடு, அந்நாளில் எல்லா மட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.

அதேபோல்தான் டிசம்பர் 13 ஆம் நாள் என்பது முக்கிய கவனத்துக்குரிய நாள். அந்த நாளில்தான் 2001 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் உள்பட ஒன்பது பேர் மரணித்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும் அல்லவா!

அப்படி இருக்கும்போது அந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நாளான டிசம்பர் 13 அன்று, நாடாளுமன்றத்தில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்ட முறையில் மிகுந்த விழிப்போடு ஏற்பாடு செய்திருக்கவேண்டும்? அப்படித் திட்டமிடப்படாத காரணத்தால்தான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள், அவை நடந்துகொண்டிருக்கும் போதே, பார்வையாளர் மாடத்திலிருந்து இருவர் குதித்து, புகைக் குப்பியை வீசியுள்ளனர் என்றால், இதற்கான முழுப் பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைச் சாராதா? அதிலும் குறிப்பாக உள்துறை அமைச்சர்தானே இதற்கான முக்கிய பொறுப்பு? அவையில் இருந்த உறுப்பினர்களின் கதி என்னவாயிருக்கும்?

புகைக்குப்பியை வீசியவர்களை கையும் களவுமாக உடனடியாகப் பிடித்தவர்கள் நாடாளுமன்ற அவைக்குள்ளிருந்த பாதுகாப்புப் படையினரும் (செக்யூரிட்டி) அல்ல; அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களே பிடித்துக் கொடுத்துள்ளனர். இதுவே சாதாரண வண்ணப் பொடியாக இல்லாமல், விஷம் கலந்த ஒன்றாக இருந்திருந்தால், அவையில் இருந்த உறுப்பினர்களின் கதி என்னவாயிருக்கும்?

அப்பொழுது அவையில் பிரதமரும் இல்லை - உள்துறை அமைச்சரும் இல்லை. டில்லியில் இருந்துகொண்டே, நாடாளுமன்றம் நடந்துகொண்டிருந்தாலும், பிரதமர் அவைக்கு வருவதில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வினாக்களுக்குப் பதில் அளிப்பதும் கிடையாது. இத்தகைய உன்னதமான ஜனநாயகத்தில் ‘நம்பிக்கையுள்ளவர்’ நமது பிரதமர்(?). செய்தியாளர்களையும் சந்திப்பதில்லை என்பது கூடுதல் தகவலாகும்.

ஜனநாயக மார்பின்மீது வீசப்பட்ட ‘வெடிகுண்டு’ : கி.வீரமணி ஆவேச அறிக்கை!

மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை!

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நிலையிலேயே அதைப் பற்றிய அறிக்கையை உடனடியாக உள்துறை அமைச்சர் தாக்கல் செய்திருக்கவேண்டாமா? அது அவருடைய அவசியமான கடமையல்லவா! அதுமட்டுமல்ல, இதுநாள்வரை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வாய்ந்திறக்காதது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும்!

‘‘எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பு’’ என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுவது, ‘பாவம் ஓரிடம் - பழி ஓரிடம்!’ என்ற நாட்டு மொழியைத்தான் நினைவூட்டுகிறது. இது - பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் காப்பாற்றும் அரசியல் முயற்சியாகும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் அடிப்படையான கடமையைச் செய்திருக்கிறார்கள்

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடமை என்ன? மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு, இந்தப் பிரச்சினைமீது அவையில் விவாதிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததன்மூலம் அவர்கள் தங்களின் அடிப்படையான கடமையைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.

ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களை மட்டுமல்ல; எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் மக்கள் வாக்களித்துதான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை மறக்கலாமா? இந்த விஷயத்தில் ஆளும்கட்சி மிகப்பெரிய தவறைச் செய்துள்ளது. எதிர்க்கட்சியினரோ தங்களின் நேர்மையான கடமையை ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் செய்திருக்கின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பிரச்சினை குறித்து விவாதிக்காமல், அவர்களை இந்தக் கூட்டத் தொடர் முடியும்வரை அவை நீக்கம் (சஸ்பென்ஷன்) செய்திருப்பது ஜனநாயக மார்புமீது வீசப்பட்ட ‘வெடிகுண்டாகும்!’ நாடாளுமன்றத்திற்குள் பார்வையாளர் மாடத்துக்குச் செல்லவேண்டுமானால், எம்.பி., ஒருவர் அனுமதி (பாஸ்) அட்டை கொடுக்கவேண்டும். பல்வேறு நடைமுறைகளும் உள்ளன. இந்தப் பிரச்சினையில் அந்த அனுமதியைக் கொடுத்தவர் பி.ஜே.பி. உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு கட்சி உறுப்பினர் இந்த அனுமதி (பாஸ்) அட்டை கொடுத்திருந்தால் எப்படி எப்படியெல்லாம் இந்தப் பி.ஜே.பி., சங் பரிவார் வட்டாரம் ஆடிக் குதித்து அமளி துமளி செய்து அரசியல் ஆதாயம் தேடி இருக்கும் என்பதும் எண்ணத்தக்கதாகும்.

நாட்டையே காப்பாற்றப் போகிறேன் என்று கூறும் 56 அங்குல மார்பளவு கொண்ட பிரதமர், நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காப்பாற்ற முடியவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானத்தைக் கிழித்து வைகுண்டத்தைக் காட்டப் போகிறேன்!’ என்று ஒருவர் சொன்னால், அது நகைப்புக்குரியதுதானே! இன்னொரு முக்கிய தகவல் - நாடாளுமன்ற பாதுகாப்புக்காகக் கூடுதல் செயலாளர் ஒருவர் உண்டு. அந்தப்பதவி ஒரு மாதமாகக் காலியாக உள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கான எண்ணிக்கை நூறு இடங்கள் பற்றாக்குறையாம். அதற்கான பணியமர்த்தம் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் புகைக் குண்டு வீசியவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக நோட்டம் விட்டுள்ளனர் என்று வெளிவந்த செய்தி, ஒன்றிய அரசின் பலகீனமான ஆளுமையை வெளிப்படுத்துகிறது.

மக்களைத் திரட்டி அறவழியில் போராடவேண்டும்

மக்களவையில், மாநிலங்களவையில் பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில், வீதிமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கான குரலை எழுப்பவேண்டும் - மக்களைத் திரட்டி அறவழியில் போராடவேண்டும். அதிக எண்ணிக்கையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற ஆணவத்தில் எதையும் செய்துவிடலாம்; நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் பெரு வெற்றிப் பெற்றிருக்கிறோம் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்! காற்றடித்த பெரிய பலூன் ஜனநாயகம் என்ற ஒரே ஒரு குண்டூசியால் வெடித்துவிடும் என்பது நினைவிருக்கட்டும்!

banner

Related Stories

Related Stories