இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதியிலும், தெற்கு வங்கக் கடல் பகுதியிலும் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகத் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாகச் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டுப் பரவலாக மழை பெய்து வருகிறது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு போர்க்கால நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் இன்று சாலைகளில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கியது. அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது.
உடனே மக்கள் எவ்விதமான சிரமங்களைச் சந்திக்கக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாக களத்தில் இறங்கினார். பிறகு போர்கால அடிப்படையில் எடுத்த மின்னல் வேக நடவடிக்கையால் வெள்ளத்தில் இருந்து சென்னை மீண்டனது. இதையடுத்து இனி எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கக்கூடாது என முடிவு செய்து, சென்னை முழுவதும் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது.
இந்த பணி சிறப்பாக முடிவடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் மழை பெய்து வந்தாலும், எங்கும் தண்ணீர் தேங்காமல் உடனே வடிந்துவிடுகிறது. இந்நிலையில் சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.
மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்" என தெரிவித்துள்ளார்.