தமிழ்நாடு

”தி.க.வும் - தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!

தி.க.வும் - தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

”தி.க.வும் - தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (06-10-2023) மாலை தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா’வில் கலந்துகொண்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொகுத்துள்ள “தாய்வீட்டில் கலைஞர்” நூலினை வெளியிட்டு ஏற்புரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

“பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” என்று தந்தை பெரியார் அவர்களைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் எழுதி இருந்தார்கள்.

அந்த உரிமைக்குரிய - அத்தகைய பகுத்தறிவுப் பகலவன் நம்முடைய தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகம்தான், தலைவர் கலைஞருக்கு தாய் வீடு – என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தலைவர் கலைஞருக்கு தாய்வீடு – இது மிகமிக பொருத்தமான தலைப்பு. தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல; எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய்வீடு.

'தாய்வீட்டில் கலைஞர்' என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டுமல்ல; ‘நானும் என் வீட்டுக்குச் செல்கிறேன்’ என்ற உணர்வோடுதான் இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.

அதிலும் குறிப்பாக, திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அழைத்தால், எங்கும், எப்போதும், எந்த நேரத்திலும் செல்வேன். காரணம், என்னைக் காத்தவர் – இன்றைக்கும் காத்துக் கொண்டிருப்பவர். அதிலும் குறிப்பாக, மிசா காலத்தில், அந்த இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர்தான் அய்யா ஆசிரியர் அவர்கள்.

'தந்தை பெரியார் அவர்களும் - பேரறிஞர் அண்ணா அவர்களும் இல்லாத இந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் வீரமணிதான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் இவர்களோடு, தலைவர் கலைஞர் அவர்களும் இல்லாத நேரத்தில் எனக்கு கொள்கை வழிகாட்டியாக இருப்பவர், அய்யா ஆசிரியர் அவர்கள்தான்!

அதனால்தான், 'நான் போகவேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்' என்பதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத்தான் நேற்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன்; நாளையும் சொல்வேன்!

திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய நேரத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘திராவிடர் கழகத்துக்கு போட்டியாக அல்ல. அதே கொள்கையை வேறொரு பாணியில் சொல்வதற்காகத்தான். அந்தக் கொள்கையைச் செயல்படுத்திக் காட்டுவதற்காகத்தான்' என்று மிக தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தி.க.வும் - தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொன்னார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

”தி.க.வும் - தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!

என்னைப் பொறுத்தவரையில், தி.க.வும் - தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல! உயிரும் உணர்வும் இணைந்து உடல் இயங்குவது போலத்தான் நாம் இந்த இனத்தின் உயர்வுக்காகப் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்!

கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்தும் முழுத் தகுதியும் கடமையும் திராவிடர் கழகத்துக்கு உண்டு. திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்கத்தின் வீரராக, திராவிடர் கழகத்தின் தீரராக இருந்தவர்தான் கலைஞர் அவர்கள். இன்னும் சொன்னால் பேரறிஞர் அண்ணா அவர்களைச் சந்திப்பதற்கு முன்னதாக தந்தை பெரியாரைச் சந்தித்தவர் கலைஞர் அவர்கள்.

1937-ஆம் ஆண்டு திருவாரூர் கமலாலயக் குளக்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரின் உரையை முதன்முதலாகக் கேட்டதாகவும், அன்றைய தினம் ஆரஞ்சு நிற சால்வை அணிந்து பளபளவென பெரியார் அவர்கள் மின்னியதாகவும் கலைஞர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது இறுதி ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதாமல், தந்தை பெரியாரின் சுற்றுப் பயண பேச்சைக் கேட்கப் போனதால் தேர்வில் தோற்றுப் போனவர் கலைஞர் அவர்கள்.

'நான் பள்ளிப் பாடத்தில் தோற்றேன். ஆனால் பெரியாரின் பள்ளிக் கூடத்தில் வெற்றி பெற்றுவிட்டேன்' என்று பெருமைப்பட்டவர் கலைஞர் அவர்கள். “நான் படித்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளிக்கூடம் - காஞ்சிக் கல்லூரி மட்டும்தான்” என்று பெருமையாக - பத்து பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் வாங்கியதைப் போன்ற பெருமையோடு சொன்னவர் கலைஞர் அவர்கள்.

அதனால்தான் அவர் படித்த பள்ளிக்கூடத்தின் சார்பில், ஈரோடு குருகுலத்தின் சார்பில், இந்த நூற்றாண்டு விழா நடப்பது மிகமிக பொருத்தமானது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களது மறைவுக்குப் பிறகு, சிலர் குழப்பம் ஏற்படுத்த முனைந்தபோது முதலமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்று மறுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஆனால் நீங்கள் முதலமைச்சரானால்தான் இயக்கம் காக்கப்படும் - தமிழ்நாடு காக்கப்படும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அவருக்காக தூது வந்தவர்தான் மானமிகு ஆசிரியர் அவர்கள். அந்த வகையில் கலைஞர் அவர்களை முதலமைச்சர் ஆக்கியவர் தந்தை பெரியார். தலைவர் கலைஞர் அவர்களுக்குத் தலைநகர் சென்னையில் முதன்முதலாகச் சிலை அமைத்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

இன்றைய தினம் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்தி, ’தாய் வீட்டில் கலைஞர்’ என்ற களஞ்சியத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார் மானமிகு ஆசிரியர் அவர்கள்.

திராவிடர் கழகத்தில்.

* தந்தை பெரியார்

* அன்னை மணியம்மையார்

* மானமிகு ஆசிரியர் அவர்கள் என்றால் -

திராவிட முன்னேற்றக் கழகத்தில்,

* பேரறிஞர் அண்ணா

* தமிழினத் தலைவர் கலைஞர்

* இந்த அடியன் - என மூன்று சகாப்தங்களாக இணைந்து பணியாற்றி வருகிறோம். கருப்பும் சிவப்பும் இணைந்ததே திராவிட இயக்கம் என்பதைப் போல இணைந்தே இருக்கிறோம். இணைந்தே இருப்போம்!

ஐம்பது ஆண்டுகாலம் ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்தவர் கலைஞர் அவர்கள். ஐந்து முறை இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள். அவரது கண்ணசைவில் இந்தியப் பிரதமர்களையும் - குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கியவர் கலைஞர். ஆனால், உங்களை இந்த நாடு எப்படி அடையாளம் காண வேண்டும் என்று கேட்டபோது, “மானமிகு சுயமரியாதைக்காரன்” என்ற ஒற்றை வரியில்தான் தலைவர் கலைஞர் அவர்களின் 95 ஆண்டு கால வாழ்க்கை அடங்கி இருக்கிறது. மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொன்ன கலைஞர் அவர்கள், குடியரசு இதழில் எழுதியதும் - பெரியார் மேடைகளில் பேசியதும் - என தொகுத்து மிகப்பெரிய களஞ்சியமாக தாய்வீட்டில் கலைஞர் என்ற நூலை உருவாக்கிக் கொடுத்துள்ளார் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

”தி.க.வும் - தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!

நெஞ்சுக்கு நீதியில் ஆறு பாகங்களை தலைவர் கலைஞர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். தாய்வீட்டில் கலைஞர் என்ற இந்த நூல் - ஏழாவது பாகம் போல இருக்கிறது.

* குடியரசு அலுவலகத்தின் துணையாசிரியராக இருந்தது,

* நாற்பது ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தது,

* அன்னை மணிம்மையார் கையால் ஓராண்டு காலம் சாப்பிட்டது,

* தனது ரத்தத்தைத் தொட்டு திராவிட கழகக் கொடியை உருவாக்கியது,

* புதுவையில் கலைஞர் தாக்கப்பட்டபோது - காப்பாற்றிப் பெரியார் அவர்கள் மருந்திட்டது,

* என் அண்ணன் முத்து அவர்கள் பிறந்தபோது - குழந்தையைப் பெரியார் கையில் தலைவர் கலைஞர் கொடுத்தது,

* என் அண்ணன் அழகிரி அவர்கள் திருமணத்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தது,

- இப்படி எத்தனையோ காட்சிகள் இந்தப் புத்தகம் முழுவதும் இடம்பெற்றிருக்கிறது.

அதிலும் குறிப்பாக அண்ணன் அழகிரி அவர்களது திருமணம் பெரியார் திடலாக நடந்தது. அதற்குப்பிறகு, தந்தை பெரியார் அவர்களுக்கு கோபாலபுரம் இல்லத்தில் விருந்து. அப்போது பெரியார் அவர்களுக்கு உணவு பரிமாறியவன் நான் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

இது தமிழர்தம் இல்லமெல்லாம் உள்ளமெல்லாம் இருக்க வேண்டிய நூல்! இதனை உருவாக்கித் தந்துள்ள ஆசிரியர் அவர்களை நன்றியால் வணங்குகிறேன். உலகில் எந்த இரண்டு இயக்கங்களுக்குள்ளும் இத்தகைய நட்பும் - உறவும் இருந்திருக்க முடியாது. முரண்பட்டு மோதல் நடத்திய காலங்கள் உண்டு. யானை தனது குட்டியைப் பழக்கும்போது மிதிக்கும் - அடிக்கும் என்பதைப் போல - பெரியார் எங்களைத் திட்டித் திட்டிப் பழக்கினார் என்று கலைஞர் அவர்கள் சொல்வார்கள். தந்தை பெரியார் மீது தலைவர் கலைஞர் வைத்திருந்த மரியாதை என்பது உணர்வுப்பூர்வமானது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் - பெரியார் அவர்கள் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை தர வேண்டும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு!

“அரசு மரியாதை வழங்க வேண்டும்” என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சொல்கிறார்கள். “அவர் எந்த அரசுப் பதவியிலும் இல்லையே” என்று மூத்த அதிகாரி ஒருவர் சொல்கிறார். உடனே, “காந்திக்கு அரசு மரியாதை கொடுத்தார்களே. அவர் எந்த பதவியில் இருந்தார்?” என்று பட்டென்று கேட்டார் கலைஞர். அதன்பிறகும் அந்த அதிகாரி விடவில்லை. “மாநில அரசு இப்படி ஒரு முடிவெடுத்தால் மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும்” என்று அந்த அதிகாரி சொல்கிறார். “கோபப்பட்டால் என்ன செய்வார்கள்?” என்று முதலமைச்சர் கலைஞர் கேட்கிறார்கள். “ஆட்சியைக் கூடக் கலைக்கலாம்” என்கிறார் அந்த அதிகாரி.

“ஆட்சியைக் கலைக்க இதுதான் காரணமாக இருக்குமானால் இதை விடப் பெருமை எனக்கு எதுவும் கிடையாது” என்கிறார் முதலமைச்சர் கலைஞர். இது ஏதோ அறிவாலயத்தில் நடந்த உரையாடல் அல்ல. கோட்டையில் நடந்த உரையாடல். தமிழ்நாடு அரசின் கோட்டையில் முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தாலும், தந்தை பெரியார் என்ற கொள்கைக் கோட்டையில் தலைமகனாக இருந்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்றார் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாடு அரசுதான் பெரியார் - பெரியார்தான் தமிழ்நாடு அரசு என்றார் தலைவர் கலைஞர். நானும் இதனையே வழிமொழிந்து வருகிறேன். உங்களின் பலத்த கரகோஷங்களுக்கிடைய மீண்டும் அதனை வழிமொழிகிறேன்.

”தி.க.வும் - தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக மட்டுமல்ல, தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர வேண்டும். இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிக் கருத்தியலாக, கூட்டாட்சிக் கருத்தியல் மலர வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் உரிமை பெற்றவைகளாகவும், அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழியாக உயர்ந்து நிற்க வேண்டும். அனைவர் குரலுக்கும் ஒரே மரியாதையும் மதிப்பும் இருக்க வேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும் - அதில் உள்ளடங்கிய தமிழ்நாடும் இயங்க வேண்டிய முறை! அத்தகைய கூட்டாட்சிக் கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.

இது அரசியல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி! தேர்தல் வெற்றியை மட்டும் கணக்கில் கொண்டு இதனை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப் போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம்.

தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். மீட்கப்பட்டே தீர வேண்டும். கல்வி உரிமை - நிதி உரிமை - சமூகநீதி உரிமை - மொழி உரிமை - இன உரிமை - மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறார்கள்.

மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி - நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியதற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள் என்றால் நம்முடைய உரிமையை எடுத்துச் சொல்ல - உரிமையை நிலைநாட்டச் செல்கிறார்கள் என்று பொருள். இந்த எண்ணிக்கையானது கூட வேண்டுமே தவிர - குறையக் கூடாது.

அதே போல் மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் பா.ஜ.க. முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என்று சொல்வதே இதை நிறைவேற்றாமல் இருக்கும் தந்திரம்தான். அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது என்பது பா.ஜ.க.வின் உயர் வகுப்பு மனோபாவம்! காலப்போக்கில் பட்டியலின இடஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது.

தமிழ் மொழி காக்க - தமிழினம் காக்க - தமிழ்நாட்டைக் காக்க - இந்தியா முழுமைக்கும் சமதர்ம - சமத்துவ - சகோதரத்துவ - சமூகநீதியைக் காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன் என்பதுதான் எனக்கு திராவிடர் கழகம் நடத்தி இருக்கும் இந்த பாராட்டு விழாவில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி!

ஏதோ சாதித்துவிட்டான் – நினைத்ததை முடித்துவிட்டான் என்பதற்காக நடத்துகிற விழா அல்ல. இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிரம்ப இருக்கிறது. அதைச் சாதிப்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும். நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை சொல்லிக்கொள்வதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை மிகச் சரியாக - முறையாகப் பயன்படுத்துவேன்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரின் கொள்கை கோட்பாடுகளை, சட்டமன்ற நாடாளுமன்ற – மக்கள் மன்றங்களில் நாங்கள் ஒலிப்போம். மக்கள் மன்றத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் - திராவிடர் இயக்கத் தோழர்கள் - பெரியாரின் தொண்டர்கள் தொய்வின்றித் தொடருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

'வீரமணி வென்றிடுக!' என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். அதையே நானும் வழிமொழிகிறேன். அய்யா ஆசிரியர் அவர்களே, ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொன்னால் அவருக்குக் கோபம் வந்துவிடும். அவருக்கு பிடிக்காது. இருந்தாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு. ஓய்வெடுத்துப் பணியாற்றுங்கள். பெரியாரையும் கலைஞரையும் கடந்தும் நீங்கள் வாழ வேண்டும்.

'பெரியாரின் ஆட்சிக்கு நாங்கள் காரணகர்த்தாக்கள். பெரியாரின் மாட்சிக்கு வீரமணிதான் காரணம்' என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். பெரியாரின் மாட்சி இன்னும் பரவ நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Related Stories

Related Stories