தமிழ்நாடு

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

விசாரணைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அதனைக் களைய உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று வீடியோ-கான்பரன்சிங் முறையினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (4.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “நேற்று தொடங்கிய இந்த மாநாட்டினுடைய இரண்டாம் நாளாகிய இன்று நாம் பல்வேறு துறைகளைச் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நல்லதொரு பயனுள்ள கலந்தாய்வினை மேற்கொண்டோம்.

கொரோனா பெருந்தொற்று, கனமழை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மீண்டு, அதற்குப் பிறகு நமக்குக் கிடைத்த ஒன்றரை ஆண்டு காலத்தில், சிறப்பான திட்டமிடல், செயலாக்கம் மற்றும் நிதி மேலாண்மையின் மூலமாக இன்றைக்கு மாநிலத்தின் பொருளாதாரத்தை சரியான வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம். இந்தச் சவாலான பணியில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதை நான் நன்றி உணர்வோடு இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

நமது அரசு, சிறந்ததொரு நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கிட நிர்வாகரீதியில் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். நமது நிருவாகக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தவும், தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளவும், மக்கள் பயனடையவும், ஆக்கபூர்வமான கருத்துக்களை களப்பணியாற்றும் உங்களிடமிருந்து பெறுவதற்காகவும்தான், இதுபோன்ற மாநாடுகள் மிகவும் அவசியமாக அமைகிறது.

எந்தவொரு திட்டத்தையும் முதலமைச்சரின் திட்டமாக, ஒரு கட்சி சார்ந்த திட்டமாகக் கருதாமல், அலுவலர்கள் அனைவரும் தங்கள் கனவுத் திட்டமாக, மக்களுக்கான திட்டமாக நினைத்து, அதை முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றினால்தான் அது மக்களுக்கு நன்மை பயக்கும். அப்போதுதான், அந்தத் திட்டத்தின் பயன் என்பது மிகப் பெரிய அளவில் இருக்கும்; உரிய முறையில் மக்களுக்கும் போய்ச் சேரும். அதனால்தான் திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள்.

அதிகாரிகள் நினைத்தால் அவை வளரும்; அதிகாரிகள் புறக்கணித்தால் அது மெலியும். அதிகாரிகள் என்பவர்கள் தனி மனிதர்களாக இருக்க முடியாது; செயல்படவும் முடியாது. அவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்து சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்பட வேண்டும். அத்தகைய காலம்தான் பொற்காலமாக அமையும். அதுவே தலைசிறந்த ஆட்சியாகவும் அமையும்.

மாவட்ட ஆட்சியர்களின் மிக முக்கியமான பங்களிப்பு என்பது, அவர் எவ்வாறு பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, நிருவாகத்தை கொண்டு செல்கிறார் என்பதில்தான் உள்ளது. நீங்கள்தான் மாவட்ட நிருவாகத்தின் தலைவர். உங்களால்தான் மாவட்டத்தில் இயங்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க இயலும். அதனை நீங்கள் திறம்படச் செய்து, அரசுத் திட்டங்களின் மூலம் மக்கள் முழுப் பயனையும் பெறச் செய்ய வேண்டும்.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

திட்டங்களை வகுக்கவும், அவற்றை நிறைவேற்ற உரிய வழிமுறைகளைச் சொல்லவும், துறைசாரா வல்லுநர் குழுக்களும் அவ்வப்போது அமைக்கப்பட்டு, ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. அதேபோல், மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவும், பல்வேறு ஆலோசனைகளின் மூலமாக அரசை வழிநடத்திட உதவி வருகிறது.

அந்த வகையில், நமது அரசின் முன்னோடித் திட்டங்களில் ஏழையெளிய மக்களிடையே, குறிப்பாக, மகளிரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டம், கடந்த மாதம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஏறக்குறைய ஒரு கோடியே அறுபத்து மூன்று இலட்சம் மகளிருக்கு, எந்தவித சிரமுமின்றி, சீரிய முறையில் விண்ணப்பங்களை வழங்கி, பின்னர் பூர்த்தி செய்த படிவங்களைத் திரும்பப் பெற்றதே மாபெரும் சாதனையாகும்.

அதுமட்டுமல்ல; பெறப்பட்ட அந்த விண்ணப்பங்களைக் குறைந்த காலத்திற்குள் ஏற்கனவே உள்ள தரவுகளுடன் கணினி தொழில்நுட்ப உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன்மூலம் தகுதியுள்ள சுமார் ஒரு கோடியே ஆறு இலட்சம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரத்தை வரவு வைத்தது அதைவிடப் மிகப் பெரிய சாதனையாகும்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உரிய பயனாளிகளை வெளிப்படையான தரவு சார்ந்த மேலாண்மை மூலம் தேர்ந்தெடுத்த முறை இந்திய வரலாற்றில், ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பாக விளங்கும். நமது மாநிலத்தின் நிர்வாகத் திறமையை உலகிற்கே எடுத்துரைக்கும் மற்றுமொரு சான்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முறை.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

மகளிர் உரிமைத் தொகை பெற்ற மகளிரின் முகங்களிலே நீங்கள் கண்ட மலர்ச்சி, நிச்சயம் உங்களின் உழைப்பின் வெகுமதி. இத்திட்டம் குறிப்பிட்ட நாளில் வெற்றிகரமாக துவங்கிட சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாவட்ட ஆட்சியர்களாகிய உங்கள் ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

அதே நேரத்தில், இத்திட்டத்தில் விடுபட்டவர்கள் தற்போது விண்ணப்பம் அளித்து வருகிறார்கள். அவற்றையெல்லாம் முறையாக, விரைவாகப் பெற்று, ஆய்வு செய்து, அவற்றின்மீது விதிகளின்படி தீர்வு காண வேண்டுமென்றும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை பல சிறப்பான முன்னோடித் திட்டங்களை தொடங்கிச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். குறிப்பாக, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களாக, மகளிருக்கான விடியல் பயணம் - மக்களைத் தேடி மருத்துவம் - ‘இல்லம் தேடிக் கல்வி’ - ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ – புதுமைப்பெண் - நான் முதல்வன் - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் - ஊட்டச்சத்தை உறுதி செய் போன்ற திட்டங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இதில் குறிப்பாக, மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் உங்களது தனிப்பட்ட பங்களிப்பைப் பாராட்ட விரும்புகிறேன். இத்திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட நீங்கள் இதில் தொடர்ந்து தனிக் கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

இதுபோன்ற நமது அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செம்மையாக, விரைந்து செயல்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், சில திட்டங்களில் அவ்வப்போது காணப்படும் சுணக்கத்தையும் நான் அடிக்கடி ஆய்வுக் கூட்டங்களின் வாயிலாக உங்களுக்குச் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.

அவற்றையெல்லாம் நீங்கள் மனதிலே நிலைநிறுத்தி, குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கால நிர்ணயம் என்ன என்பதை அறிந்து, அந்தக் காலத்திற்குள் அவற்றை முடித்திட வேண்டுமென்று இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

நமது மாநிலத்தில் தொழில் துறையின் வளர்ச்சிக்காக பல கொள்கைகளையும் வெளியிட்டு, அந்நிய முதலீட்டாளர்களை நமது மாநிலத்திற்கு ஈர்த்து, அதன்மூலம் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெருக்கிட அரசு அரும்பாடுபட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக, நம்முடைய திட்டங்களின் மூலம் கல்வி, சமூகம், பொருளாதாரம் என்ற அனைத்துத் தளங்களிலும் நம்முடைய மாநிலம் தற்போது சரியான பாதையில் நடைபோட்டு வருகிறது.

நான் முன்னர் குறிப்பிட்ட திட்டங்களை மட்டுமல்ல; இந்த அரசின் மற்ற திட்டங்களின் பலன்கள் உரியவர்களை முழுமையாகச் சென்றடைய வேண்டுமானால், மாநில நிர்வாகம் மட்டுமல்ல, மாவட்ட நிர்வாகமும் தொய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும். ஏழை, எளிய மக்களிடம் நேரடி தொடர்பில் நீங்கள் இருக்க வேண்டும். திட்ட ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது மட்டுமல்லாமல், அதன் பலன் எந்தளவு மக்களைச் சென்றடைந்துள்ளது; அதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பதை எல்லாம் நீங்கள் நேரடியாக அறிந்து, அவற்றை நீக்கிட வேண்டும்.

பல மாவட்டங்களில் நிலம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக, நிலத்தை அளந்து காட்டுதல், பொது நிலத்தைப் பயன்படுத்துதல், கோயில் நிலங்கள் போன்ற பல விஷயங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்ந்து காணப்படுகின்றன. சில சமயங்களில் அவை சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகவும் மாறி விடுகிறது. எனவே, நில அளவைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாதந்தோறும் நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கென மட்டுமே ஆய்வுக் கூட்டம் நடத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

அடிக்கடி அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்யுங்கள். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகளின் தரம் குறித்து கேட்டு அறியுங்கள். அதேபோல், மருத்துவர்களுக்கும் சில தேவைகள் இருக்கலாம்; அவற்றையும் அறிந்து தீர்வு காணுங்கள். கல்வியும், மருத்துவமும் இந்த அரசின் இரு முக்கியமான முன்னுரிமைப் பிரிவுகள் என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள்.

அடுத்தபடியாக, பல்வேறு அரசுத் திட்டங்கள் தொடர்பாக வழங்கப்படும் சுற்றறிக்கைகளின் முழு விவரங்கள் சில சமயங்களில் அனைத்து கிராம நிருவாக அலுவலர்களையும் சென்றடைவதில்லை என்று கேள்விப்பட்டேன். அரசு திட்டங்களின் விவரங்களை முழுமையாக அவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், நடைமுறையில் காணும் சிக்கல்கள் குறித்தும் அறிந்து கொள்ள அவ்வப்போது கிராம நிருவாக அலுவலர்கள் அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதும் நல்ல பலனை அளிக்கும் எனக் கருதுகிறேன்.

“ஏழை, எளிய மக்களுக்கு நலம் தரும் திட்டங்களில் எந்தத் தொய்வும், தாமதமும் இன்றிப் பணியாற்றுங்கள்” என்பதுதான் எனது அன்புக் கட்டளை. அதனை நீங்கள் மனதிலே கல்வெட்டாகச் செதுக்கி வைத்துக் கொண்டு செயல்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு அது வளர்ச்சியைத் தரும்; மகிழ்ச்சியைத் தரும்.

அரசு செயல்படுத்தும் சில திட்டங்களில் சிறுசிறு குறைகள் ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் சில சமயங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மகளிருக்கான விடியல் பயணத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் தரம், மருத்துவ சேவைகளின் தரம், சாலைக் கட்டமைப்பு வசதிகளில், கழிவுநீர் கட்டமைப்புகளில் அரசிடமிருந்து பெற வேண்டிய அனுமதிகள், சான்றுகள் என்று குறிப்பிட்ட சில சேவைகளில் மக்களுடைய எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

முதல்வரின் முகவரி துறையிலும், மேலும், நான் மாவட்டங்களில் மேற்கொள்ளும் பயணங்களிலும் தொடர்ந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள். மேற்குறிப்பிட்ட அரசு சேவை குறைபாடுகள் எல்லாம் களையப்பட வேண்டுமென்றால், தலைமைச் செயலகத்தில் அமர்ந்து கொண்டு ஆணைகள் பிறப்பித்தால் மட்டும் போதாது. அந்த ஆணைகளின் செயலாக்கத்திற்கு மாவட்ட நிர்வாகமும், முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநில நிர்வாகம் எப்படி மாவட்ட நிர்வாகத்தை சார்ந்துள்ளதோ, அதுபோன்று மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட அனைத்து வட்டங்களிலும் / வட்டாரங்களிலும் உள்ள அலுவலர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்திடல் வேண்டும்.

இந்த நோக்கத்தில் தான், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் மூலம் மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்களை பற்றியும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகளை பற்றியும், நானே நேரடியாக ஆய்வு செய்து விவாதித்து வருகிறேன்.

ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினை பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அது, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை. இது ஒரு சமூகக் குற்றம். இந்த அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, எந்தவகையாக வன்முறையையும் சகித்துக் கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவ்வகைக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கிறார்கள்.

இதன்மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதை நீங்கள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென ஒரு ஆய்வு நடைமுறையை உள் துறைச் செயலாளர் அவர்கள் வடிவமைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறைத் தலைவருக்கும் வழங்கி, அடுத்த மாதம் முதலே செயல்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

அரசின் பல்வேறு திட்டங்கள் எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும், சில மாவட்டங்களுக்கு, அம்மாவட்டங்களுக்குரிய சமூக, பொருளாதார சூழ்நிலைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். அத்தகைய பிரச்சனைகளை, அதற்கான தீர்வுகளை விவாதிக்கின்ற களமாக இம்மாநாடு உங்களுக்கு அமைந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

மாவட்ட நிருவாகத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள நீங்கள், மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். வழக்கமான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, காலதாமதத்தைத் தவிர்க்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

சமீபத்தில், அரசுத் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும்போது, அரசு அலுவலர்கள் தங்களைக் காண வரும் பொது மக்களை உட்கார வைத்து, அவர்கள் குறைகளைக் கேட்டறிய வேண்டும். அதிலேயே அவர்களுடைய பாதி குறை தீர்ந்த திருப்தி அவர்களுக்கு ஏற்படும் என்று நான் அப்போது குறிப்பிட்டிருந்தேன். அதையே உங்களுக்கும் இங்கே நான் சொல்ல விரும்புகின்றேன். இதனை நீங்கள் உங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து சார்-நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும்.

மக்களாட்சி தத்துவத்தின்படி, மக்கள்தான் நமது எஜமானர்கள். அவர்களுக்கு சேவை ஆற்றிடத்தான் நாம் அனைவரும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறோம். இதனை நீங்கள் ஒருபோதும் மறந்திடக் கூடாது. ஒருசில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்களை பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் தவிர, மற்ற நாட்களில் சந்திக்க இயலாத நிலை உள்ளது என்று அறிகிறேன். இது சரியல்ல. தலைமையகத்தில் நீங்கள் இருக்கும் நாட்களில் பொது மக்களைச் சந்திப்பதற்கு பார்வையாளர்கள் நேரம் என ஒதுக்கி, அவர்களைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

“தாமதம் இன்றிப் பணியாற்றுங்கள்”: ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம் - முழு விவரம்!

சாலை விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது நீங்களே களத்திற்குச் செல்ல வேண்டும். மக்களை மீட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு, அரசின் முகமாக; மக்களுக்கு உதவும் கரமாக நீங்கள் செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக உங்களது பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவையனைத்தையும், எவ்வளவு விரைவாகவும், சிறப்பாகவும் நடத்தி கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு பேரும், மரியாதையும் கிடைக்கும். திட்டங்களின் சுணக்கமும் தவறு ஏற்படுமானால், அதன் மீதான விமர்சனம் எங்கள் மீதுதான் வரும். தேர்தல் என்பதால், மிக அதிகமாகவே வரும். உங்கள் கவனத்திற்கு வரும் புகாரை உடனடியாக களையுங்கள். அதை செய்தாலே விமர்சனங்கள் வராது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் தெரிவித்த ஆலோசனைகளும், கருத்துக்களும் அரசின் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொண்டு, நிறைவாக, இந்தக் கூட்டத்தில் சில அறிவிப்புகளை தற்போது வெளியிட விரும்புகிறேன்.

முதலாவதாக, அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தற்போது மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஆயிரத்து நானூறாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்து நூறு என்பது இனி ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1,71,844 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு 68 கோடியே 77 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதனை கல்விக்காக செய்யும் ஒரு முதலீடு என்று கருதியே இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டாவதாக, காவல் துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின்படி, கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 50 ஆயிரமாக வழங்கப்படும்.

மூன்றாவதாக, விசாரணைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அதனைக் களைய மாண்பமை உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று வீடியோ-கான்பரன்சிங் முறையினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நான்காவதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளை பழுதுநீக்கம் செய்து சீரமைக்க சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்.

ஐந்தாவதாக, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த தேவையான அனுமதிகளை வழங்க தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒரு வழிகாட்டுக் குழு அமைக்கப்படும். இந்த அறிவிப்புகளோடு, சிறப்பாகப் பணியாற்றிவரும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும், மாவட்ட வன அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories