சென்னை தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் Madras Eye கண் பாதிப்பு குறித்த முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், Madras Eye கண் பரிசோதனை முகாம் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இயல்பை காட்டிலும் குறைப்பது பாதிப்பை தடுப்பது என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசு, தனியார் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 12 லட்சம் மாணவர்களுக்கும் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை Madras Eye கண் பரிசோதனை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு Madras Eye சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடும் வெப்பம் நிலவும் காலங்களிலும், ஈரப்பதமான காலங்களிலும் Madras Eye பரவுகிறது. நோய் பாதிப்பு வந்தவர்களுக்கு கண் வலி, கண்களில் நீர் வழிதல், அரிப்பு, எரிச்சல் உள்ளிட்டவை அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண்கள் மற்றும் கைகளை நல்ல நீரினால் கழுவ வேண்டும்.
அதேபோல், கண் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று தான் சொட்டு மருந்து உள்ளிட்டவையை பயன்படுத்த வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. தினசரி 100-க்கும் குறைவானவர்களே Madras Eye நோய்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள். அரசும் இதனை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
இன்று முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 400-க்கும் மேற்பட்ட அரசு கண் மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த கண் மருத்துவர்களும், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் அமைப்புகளில் உள்ள கண் மருத்துவர்களை கொண்டு 12 லட்சம் மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.